“காளியை வழிபடுவது குறித்து வங்க மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று பாஜகவுக்கு திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “என்னை பொறுத்தவரை காளி மாமிசம் உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எனக் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் மஹுவா மொய்தாரவிடம் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “காளி குறித்தும், காளியை வழிபடுவது குறித்தும் பாஜகவினர் வங்க மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். வடக்கிலும், நாட்டின் ஏனைய சில மாநிலங்களிலும் பாஜக புகுத்தி வரும் இந்துத்துவாவை மேற்கு வங்கத்திலும் நுழைக்க அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM