இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மன்றத்தினால் 2022 ஜூலை 07 ஆம் திகதி கொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான 6வது மாநாட்டினை, கொழும்பு பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பு நாடுகளான இந்தியா, மாலைதீவு, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகியவை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளன.
இதேவேளை பங்களாதேஷ் மற்றும் சிஷெல்ஸ் ஆகியவை இம்மாநாட்டில் அவதானிப்பாளர்களாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2. இந்திய குடியரசின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஶ்ரீ விக்ரம் மிஷ்ரி, மாலைதீவுகள் குடியரசின் வெளியுறவுச் செயலாளர் திரு. அஹ்மட் லதீப், மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் அலுவலக பாதுகாப்பு விவகாரங்களுக்கான தலைமை இணைப்பாளர் திரு. ஜொய்திஷ்டீர் தெக்கா, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா WWV, RWP, RSP, VSV, USP, ndc, psc, MPhil, ஆகியோர் தமது பேராளர்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர். இலங்கை கடற்படையின் வெளியுறவுகளுக்கான பணிப்பாளரும் கடல் சார் நடவடிக்கை பணிப்பாளரும் பதில் செயலாளருமான கொமடோர் எம்.எச்.நிஷாந்த பீரிஸ் RSP,USP அவர்கள் கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் கொழும்பு செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இதேவேளை பங்களாதேஷைச் சேர்ந்த பேராளர்களுக்கு ஆயுத படைப் பிரிவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வேகர் உஷ் ஷமான் SGP, psc தலைமை தாங்கியிருந்த அதேநேரம் சிஷெல்ஸ் பாதுகாப்பு படைகளின் பிரதானி மேன்மை தங்கிய சைமன் அர்ச்சங்கே டைன் அவர்கள் சிஷெல்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
3. 2022-23 காலப்பகுதிக்கான ஒத்துழைப்புக்கான வழி வரைபடத்தினை அமுல்படுத்துதல் மற்றும் 2022 மார்ச் 9-10 ஆகிய திகதிகளில் மாலைதீவுகளில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழும தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான 5வது மாநாட்டில் திர்மானிக்கப்பட்ட விடயங்களான:
- கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்
- பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத ஒழிப்பு
- கடத்தல்கள் மற்றும் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் போராடுதல்
- இணையப் பாதுகாப்பு, முக்கிய உட்கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு
- மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம்
ஆகியவை தொடர்பாக இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்களால் கலந்துரையாடப்பட்டிருந்தது.
(இந்த ஊடக அறிக்கைக்கான உள்ளீடுகள் இம்மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட கூட்டு ஊடக அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை)
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
08 ஜூலை 2022