கோலிவுட் ஸ்பைடர்: ஷாருக்கான் vs விஜய் சேதுபதி; லிங்குவின் கம்பேக்; இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்!

* அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடந்து வருகிறது. ஷாருக் அப்பா – மகன் என டபுள் ஆக்‌ஷனில் நடித்து வருகிறார். படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வந்தார்கள். ஏற்கெனவே அவர் பாலிவுட்டில் நான்கு படங்களில் நடித்து வருவதால் அட்லியிடம் இது குறித்துப் பேசியிருந்தார். “நீங்கள் கேட்டிருக்கும் தேதிகளில் கால்ஷீட் இருந்தால், வந்துவிடுகிறேன். மற்றபடி எந்தத் தயக்கமுமில்லை” என விஜய் சேதுபதி சொல்லியிருந்தார். இப்போது நடிக்கச் சம்மதித்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவரது போர்ஷன் மும்பையில் ஷூட் செய்யப்பட உள்ளதாம். பாலிவுட் பாட்ஷா vs மக்கள் செல்வன்!

இளையராஜா | Raaja – Live in Concert

* ராஜ்யசபா பதவி, பாராட்டுக்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தவாறே கேட்டுக்கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறார் இளையராஜா. அங்கே எட்டுக் கச்சேரிகளுக்காகப் பறந்திருக்கிறார். அவர் அங்கே செல்வதற்கு முன்னரே அவரது எம்.பி நியமனம் தொடர்பாக அவரின் சம்மதத்தைப் பெற்றுவிட்டார்கள். தெலுங்குப் பாடல்களுக்கான கான்சர்ட்டும், தமிழ்ப் பாடல்களுக்கான கான்சர்ட்டும் அங்கே எட்டு நகரங்களில் நடக்கவிருக்கின்றன. அனைத்து இசை நிகழ்ச்சிகளும் வருகிற 16-ம் தேதியோடு முடிவடைந்து விடுகின்றனவாம். அதன்பின், அங்கே மேலும் ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டு 18-ம் தேதி புறப்பட்டு சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி சொல்ல ஏற்பாடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பும் இருக்கிறது. சென்னைக்கு வந்ததும் அவருக்கு ரஜினியும், கமலும் சேர்ந்து சிறு வரவேற்பு நடத்தவும் ஆலோசனை செய்து வருகிறார்களாம். ராஜாதி ராஜா!

* சமீபத்தில் நடந்த ‘தி வாரியர்’ பட விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியதும், கண்ணீர் விட்டதும் வைரலாகி வருகிறது. நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் அவரிடம் ஆறுதல் கூறி, அன்புடன் பேசியிருக்கிறார்கள். அவரது பட ஹீரோக்கள் பலரும் ஒன்று சேர்ந்து அவருக்காக ஒரு படம் செய்து தரலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையே மணிரத்தினம், ஷங்கர் தலைமையில் இயங்கும் 13 இயக்குநர்கள் கொண்ட நண்பர்கள் வட்டம், லிங்குவின் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்களாம். லிங்குசாமி 2.0!

அஞ்சலி

* அஞ்சலி கிட்டத்தட்டச் சென்னையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வீடு வாங்கிக் கொண்டு செட்டிலாகிவிட்டார். இங்கே அவரைப் பற்றி கிசுகிசுக்கள் பல பரவி வந்தாலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லையாம். இதனிடையே ஆன்மிக பயணமாக, இமயமலைக்கும் சென்று வந்திருக்கிறார். மனதளவில் எப்போது சோர்வு தட்டினாலும் உடனே அவர் போன் செய்து பேசுவது இயக்குநர் ராமிடம் தானாம். அவரும் அஞ்சலியைக் கிட்டத்தட்ட மகள் அளவிற்குக் கொண்டாடுகிறார். இன்றும் அவர் ‘கற்றது தமிழ்’ ஆனந்திதான்!

* கல்யாணத்திற்கு முன்பு நயன்தாராவைச் சந்திக்க வேண்டுமென்றால் விக்னேஷ் சிவனைத்தான் எல்லோரும் தொடர்பு கொள்வார்கள். ஆனால் இப்போது விக்கி, அஜித்தின் பட வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டதால் நயனுக்கென தனி மேனேஜர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். தவிர, ஸ்கிரிப்ட் கேட்பதற்கு ஒரு குழுவை நியமித்து விட்டார். அவர்கள் கைகாட்டும் கதைகளை மட்டுமே நயனும் விக்கியும் பரிசீலித்து ஓகே செய்கிறார்கள். புது பார்முலா!

இந்தியன் – 2

* லைகாவின் தயாரிப்பில் கமலின் ‘இந்தியன் 2’விற்கான வேலைகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் பூந்தமல்லியில் உள்ள ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி உள்பட மொத்தம் 4 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதன்பின் ஷங்கரும், கமலும் ஆளுக்கொரு படங்கள் பண்ணக் கிளம்பிப் போய்விட்டனர். இதற்கிடையே லைகா தயாரித்த ‘டான்’ படத்தை வாங்கி வெளியிட்ட உதயநிதி, லைகாவிடம் மீண்டும் இந்தியன் 2-வை துவங்குவது குறித்துப் பேசினார். அவரது முயற்சியால் இப்போது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இம்முறை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட்கள் அமைத்து வருகின்றனர். அங்கேதான் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கான செட்களையும் அமைத்திருந்தனர். இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.