தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, 2022 ஜூன் 27 ஆந் திகதி அன்று சான்சரி வளாகத்தில் ‘இலங்கையின் கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் ஏனைய விசா வசதிகள்’ என்ற ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
வர்த்தக சபையின் பிரதிநிதிகள், முக்கிய முதலீட்டாளர்கள், முக்கிய வர்த்தகர்கள், முன்னணி பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள், விமானப் பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய விசா வசதிகள்’ குறித்து அழைப்பாளர்களுக்கு விளக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு தனது ஆரம்ப உரையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களையும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வரவேற்பதாகவும் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தார். இலங்கை வழங்கும் முதலீடுகள் மற்றும் பல்வேறு சுற்றுலா வாய்ப்புக்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் விசா விதிமுறைகளை தாராளமயமாக்கல் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதாக இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்புக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.
இலங்கையில் விசா வசதிகள் குறித்த விரிவான விளக்கக்காட்சியின் போது, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வாழ்வதற்கும், கற்பதற்கும் ஆர்வமுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக ‘கோல்டன் பரடைஸ் வீசா திட்டத்தை’ இலங்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதாக தூதுவர் தெரிவித்தார். ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம்’ என்பது முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கையின் நன்மைகளை அனுபவிப்பதற்கும் விசா திட்டத்தின் கீழ் அர்ப்பணிக்கப்பட்ட நீண்ட கால வதிவிட விசா திட்டமாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
ஊடாடும் அமர்வில், தூதுவர் மனிதாபிமான வர்த்தகத்தில் ஈரானிய வணிக பங்காளிகள் ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவிற்கு அப்பால் தெற்காசியாவிற்கு, குறிப்பாக இலங்கைக்கு ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம்’ மற்றும் ஏனைய விசா வசதிகளைப் பயன்படுத்தி தமது வணிக ஈடுபாடுகளைக் கொண்டு வர முடியும் எனத் தெரிவித்தார். ஈரானில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைத் தக்கவைத்துக்கொள்ள ஈரான் சுற்றுலாத் துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தூதரகத்தில் நடைபெறும் விசா ஊக்குவிப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு இலங்கைத் தூதுவருக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்த ஈரானின் பிரபல முதலீட்டாளரும் தொழிலதிபருமான அலிரேசா பர்டெய், ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தமது பிரச்சினைகளையும் தடைகளையும் தீர்த்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்ததாகத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் அனைவரின் சார்பாகவும், இலங்கையின் விசா தாராளமயமாக்கல் ஆட்சிமுறைகளை ஈரானில் தொடர்புடைய துறைகளுக்கு மத்தியில் பரப்பி, கோல்டன் பரடைஸ் விசாவைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதாக அவர் உறுதியளித்தார்.
‘ஆசியாவின் சிறந்த இலக்கு’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படமும் திரையிடப்பட்ட அதே வேளை, பங்கேற்பாளர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
தெஹ்ரான்
2022 ஜூலை 06