கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய இடங்களில், மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை ஈடுபட்டனர்.
கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர். மேலும், “நமது அம்மா” நாளிதழ் வெளியீட்டாளராகவும், அதிமுக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலராகவும் உள்ளார். தவிர, சில தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6ம் தேதி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று சோதனை நடந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 3வது நாளாக இன்றும் (ஜூலை 8) தொடர்ந்தது. பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் சந்திரசேகர் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்றும் (ஜூலை 8) 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று (7-ம் தேதி) இரவு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்திரபிரகாஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் சில மணி நேரங்கள் கழித்து திரும்பிய சந்திரபிரகாஷிடம் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல், புலியகுளம் பெரியார் நகரில் உள்ள சந்திரசேகர் தொடர்புடைய ஆலயம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் இன்றும் (ஜூலை 8) 2வது நாளாக சோதனை நடந்தது.
அதேபோல், சந்திரபிரகாஷின் வீடு, பீளமேடு கொடிசியா வர்த்தக மையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.