அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதால் பாதுகாப்பு தரக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஜெயகுமார் இன்றுமனு அளித்தார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நுழைய இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறோம். இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பொதுகுழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் சென்னை வர தொடங்கிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகம் சமூகவிரோதிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என சசிகலா கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயகுமார், “அவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம்” என்றார்.
“முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியின் மகன் கிருஷ்ணகிரியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு தமிழக அமைச்சர் காந்தி உதவி செய்திருப்பதன் மூலம் கட்சி விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு, “ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கடிதம் கொடுத்ததன் மூலம் திமுக உடனான ஒபிஎஸ்-இன் தொடர்பு வெளிப்படையாக தெரியவந்துள்ளது” என ஜெயகுமார் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM