லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பேருந்து 50 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு முன்னாள் சென்ற லாரியை அரசு பேருந்து முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.
இதில், லாரியின் மீது இடதுபக்கமாக பேருந்து அதிபயங்கரமாக மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தினால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM