டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்ததாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தகவலின்படி அபேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த NHK செய்தியாளர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அபே ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Former Japanese Prime Minister Shinzo Abe collapsed during a speech in the city of Nara, in western Japan. Initial reports say he may have been injured. An NHK reporter on site heard something that sounded like a gunshot, and saw Abe bleeding: Japan’s NHK WORLD News
— ANI (@ANI) July 8, 2022
ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. 67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதிக காலம் பிரதமராக இருந்தவர்: ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், “நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா” செய்தார்.