ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு… தாக்குதல் நடந்தது எப்படி?

ஜப்பான் நாட்டில் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

ஜப்பான் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான அரசியல்கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, வரவிருக்கும் மேற்கு ஜப்பானின் நாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியானது. ஆனால் அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக என்.எச்.கே (NHK)  நிருபர் ஒருவர் கூறியுள்ள நிலையில், கீழே விழுந்த ஷின்சோ அபே உடலில் இரத்தப்போக்கு இருந்ததாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஷின்சோ அபேயின் தற்போதைய நிலை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயலை பொறுத்துக் கொள்ள முடியாது, என்று கூறியள்ளார். இதற்கிடையில், நாரா நகர தீயணைப்புத் துறை, ஷின்சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவரது உடலில் எந்த அசைவும் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் சுமார் 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 8.30 ) நடந்தது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கு முன்னதாக ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு தெருவில் அபே பிரச்சார உரையாற்றிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது இரண்டுமுறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், முதல்முறை யாரும் விழுந்த மாதிரி தெரியவில்லை என்றும், 2-வது முறை சத்தம் கேட்டபோது முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சரிந்து விழுந்ததாகவும் அங்கிருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோல் அபே உரையின் போது தொடர்ச்சியாக இரண்டு முறை துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்த நிரூபர் ஒருவரும் கூறியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பல ஷாட்களை சுட்டதால் அபே மார்பின் இடதுபுறத்தில் குண்டு பாய்ந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் அவரின் கழுத்து பகுதியிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டது யார்?

இந்நிலையில், அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நாரா சிட்டியில் வசிப்பவர் என்று கூறப்படும் 41 வயதான டெட்சுயா யமகாமி, கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜப்பானிய ஊடக நிறுவனமான என்எச்கே (NHK) காவல்துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்று முன்னாள் கடல்சார் தற்காப்புப் படை உறுப்பினர், ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை என்றும் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி அங்கேயே இருந்ததாகவும் தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் என்எச்கே (NHK)  செய்தி நிறுவனத்திடும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அபேயின் பாதுகாவலராக பரவலாகக் கருதப்படும் தற்போதைய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, இந்த  துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு தலைநகர் டோக்கியோவுக்குத் திரும்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து ஜப்பான் நாட்டிற்காக அமெரிக்க தூதுவர் ரஹ்ம் இமானுவேல், வெளியிட்டுள்ள அறிக்கையில்.  துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அமெரிக்கா “சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது அபே ஜப்பானின் தலைசிறந்த தலைவராகவும், அமெரிக்காவின் அசைக்க முடியாத நண்பராகவும் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்களின் நல்வாழ்வுக்காக அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்க மக்களும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அபே, 2020 ஆம் ஆண்டில் தொற்று நோய் தாக்குதலுக்கு பின் பதவி விலகுவாக அறிவித்திருநதார். அதற்கு முன்னர் அதிக காலம் பணியாற்றிய பிரதமராக இருந்த அவர் 2006, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்குச் வந்து இந்தியாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.