தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு , புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதி, ஆந்திர கடலோர பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக பெய்யும் கனமழையால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில் தற்போது 85.20 அடி நீர்மட்டமும், 18.6 டிஎம்சி நீர் இருப்பும் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், 3 நாட்களில் 7 அடிக்கு மேல் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக உள்ளநிலையில், தற்போது 71.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்கள், சத்தியமங்கலம், பவானிசாகர், கோத்தகிரி செல்வதற்கு பரிசலில் கடப்பது வழக்கம், கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆபத்தான முறையில், மக்கள் பரிசலில் பயணப்படும்நிலை உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM