சென்னை: தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குளிர் அலை உருவாகும் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில், ‘‘தற்போது சூரியனிடமிருந்து பூமி வெகு தூரம் நகர்ந்து செல்கிறது. அதனால் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு தமிழகத்தில் நிலவிய வெப்பநிலையை விட குளிர்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை மக்கள் அனுபவிப்பார்கள். அதனால் நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் உண்டாகும். அதனால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் கே.பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவுகிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் அத்தகைய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதுமில்லை’’ என்று கூறியுள்ளார்.