இம்பால்: மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் மோரே நகரம் உள்ளது. இந்தநகரைச் சேர்ந்த பி.மோகன் (27), எம்.அய்யனார் (28) என்ற 2 தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மியான்மரின் தாமு நகரில் உள்ள நண்பர் ஒருவரை காணச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு மதியம் 1 மணியளவில் இவர்கள் இருவரும் துப்பாக்கிகுண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து மோரே காவல்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, “தமிழ் இளைஞர்கள் கொலைக்கான விவரம் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை இங்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
போராளிகள் சுட்டதாக தகவல்
மோரே தமிழ்ச் சங்க செயலர் கே.பி.எம்.மணியம் கூறும்போது, “தமிழ் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் தாமு நகருக்குச் சென்றனர். அங்கு ராணுவ ஆட்சிக்கு ஆதரவான பியூ ஷா ஹடீ போராளிகள் இவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் பிறகு போராளிகளால் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது” என்றார். மோகனுக்கு கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் ஆனது. அய்யனாருக்கு மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனர்.
உறவினர்கள் அமைதி ஊர்வலம்
இதற்கிடையே, மோகன், அய்யனார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும், அய்யனார் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், அய்யனாரின் தந்தை முருகன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாலமுருகன் நகரில் இருந்து, பாடியநல்லூருக்கு அய்யனாரின் உறவினர்கள் அமைதி ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய செங்குன்றம் போலீஸார், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தக் கூடாது. கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும்படி கூறினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.