அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமைக்கழகத்தைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளால், அதிமுகவில் முக்கோண மோதல் உருவாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான சசிகலா, 2017 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த ஆண்டு விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருபதாகக் கூறினார். சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தற்போது அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான், சசிகலா, அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே சட்டப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், சசிகலா தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். சசிகலா தொகுதி வாரியாக சுற்றுப்பயண அட்டவணை வெளியிட்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே, அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி என இரண்டாக இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், தற்போது சசிகலாவும் அதிமுகவைக் கைப்பற்ற தீவிரமாகக் களமிறங்கி இருப்பதால் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 6 ஆம் தேதி திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் சுற்றுப் பயனம் மேற்கொண்ட சசிகலா, செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அதிமுகவின் பொதுச்செயலாளர், நேரம் வரும்போது அதிமுக தலைமைக் கழகத்துகு தொண்டர்களுடன் நிச்சயமாக செல்வேன் என்று கூறினார். இதனால், சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு, தொண்டர்களுடன் இணைந்து மாபெரும் பேரணியை நடத்த இருப்பதாகவும் தொண்டர்களுடன் பேரணியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே போல, தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “மக்கள் காட்டும் வழியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி தொண்டர்கள் தான் தீர்மானிக்க முடியும். நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர். எனவே அடுத்தக்கட்டமாக அதிமுக தொண்டர்களை திரட்டி அதிமுக தலைமை கழகத்துக்கு செல்வேன்.
நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று சசிகலா ஆவேசமாகப் பேசியுள்ளார் சசிகலா.
சசிகலா அரசியல் சுற்றுப் பயணத்தின் மூலம் தொண்டர்கள் ஆதரவைப் பெற்று தொண்டர்களுடன் பேரணியாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்வதுதான் அவருடைய திட்டம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
அண்மையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் ‘அதிமுகவின் பொதுச் செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே! கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
இதனால், அதிமுகவில் ஏற்கெனவே ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதலால் குழப்பம் நிலவி வரும் நிலையில், சசிகலாவும் தலைமைக் கழகத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களால் அதிமுகவில் முக்கோண மோதல் உருவாகியுள்ளது.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஜூலை 9 ஆம் தேதி சசிகலா சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அதிமுக கொடியை அவர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பிரேம் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“