சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் இன்று முதல் கட்டணமின்றி புனித நீராடலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு தனி வரிசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளி குகையில் தரிசனம் செய்வதற்கும் அனுமதி கட்டணம் வசூல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.
மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, சண்முக விலாசம் மண்டபம் பகுதியில் அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி, கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் தங்கள் வயதை காட்டும் வகையில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை அசலை கோயிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்ட்டரில் காண்பித்து, விரைவு தரிசனத்துக்கு செல்லலாம். உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார்.
மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி தகவல் மையத்தில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், வடக்கு வாசல் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான ரேம்பில் சண்முகர் சந்நிதி வழியாக சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்யும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அனைத்து வசதிகளும் ஜூலை 8-ம் தேதி (இன்று) முதல் செயல்படுத்தப்படும்.