திருச்செந்தூர் முருகன் கோவிலில் வள்ளிக்குகை, நாளி கிணறுக்கான கட்டணம் ரத்து! சேகர்பாபு…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், அங்குள்ள வள்ளிக்குகைக்குள் சென்று வள்ளியை  தரிசனம் செய்வதற்கும் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம்  இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத் துறை  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருமே நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அவர்களின் அறிவுரையின்படி 14.06.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீன்வளம், மீனவர்நலத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருக்கோயிலில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேற்கண்ட ஆய்விற்குப்பின்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் புரிவதற்கும் நபர் ஒன்றுக்கு அனுமதி கட்டணமாக வசூல் செய்யப்படுவதை ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல் படுத்தப்பட உள்ளது.

மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு மூத்த குடிமக்கள் நலன் கருதி சண்முகவிலாசம் மண்டபம் பகுதியில் தனி வரிசை ஏற்படுத்தி கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் வயதினை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை அசலினை திருக்கோயிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்யவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி சக்கர நாற்காலி (Wheel Chair) வசதி தகவல் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வடக்கு வாசல் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையிலான ரேம்ப் வழியாக பக்தர்கள் வெளியேறும் வழியில் சண்முகர் சன்னதி வழியாகச் சென்று நேரடியாக கட்டணமின்றி மூலவரைத் தரிசனம் செய்யும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

மேற்கூறிய அனைத்தும் 08.07.2022 முதல் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.