திருமலை: இந்நிலையில், திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், சேஷாச்சல வனப்பகுதியில் தொடர்ந்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பதி- திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் 10 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பாறைககள் சரிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமலை- திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் அங்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றினர். மண் சரிவையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுமார் அரை மணி நேரத்தில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.