'தி வாரியர்' மேடையில் லிங்குசாமி கண்ணீர்
லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் படம் ‛தி வாரியர்'. ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் லிங்குசாமி பேசமுடியாமல் மேடையில் அழுதார். பிறகு அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு கண்ணீர்மல்க பேசியதாவது: இங்கே என்னை மதித்து கூடிய பல திரையுலகினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். திரைத்துறையில் பல நண்பர்களின் ஆதரவைப் பெற்றதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் மிகச் சில படங்கள் மட்டுமே சரியான ஆற்றலைப் பெறுகின்றன. ராம் மற்றும் டிஎஸ்பியின் எனர்ஜி லெவல்கள் இந்தப் படத்திற்கு சிறப்பாக இருந்ததால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. நதியாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, அது தற்போது சரியான திரைப்படத்தில் நடந்துள்ளது.
கிர்த்தி ஷெட்டிக்கு மீரா ஜாஸ்மினின் சாயல்கள் உள்ளன, மேலும் அவர் திரைத்துறையை ஆள்வார் என்பது உறுதி. ஆரம்பத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பின்னர் குடும்ப நண்பர்களாகி விட்டோம். இந்த படத்தில் ஆதி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இதுவரை நான் செய்த படங்களில் அவர்தான் சிறந்த வில்லன். அடுத்த ஆண்டு 'சிறந்த வில்லன் பிரிவில்' அதிக விருதுகளை அவர் வெல்வார்.
இந்த திரைப்படத்திற்காக நான் முழு மனதுடன் உழைத்தேன், இப்படம் அவருக்கு நல்ல லாபத்தை தரும். சண்டக்கோழி, பையா நடிகர்களுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதுபோலவே ராமுக்கும் வாரியர் அமையும். இதுவரை என்னுடன் பணியாற்றிய விக்ரம், மம்முட்டி, சூர்யா போன்ற எனது ஹீரோக்களின் கலவை அவர்.
இவ்வாறு லிங்குசாமி பேசினார்.