போடி அருகே குடும்ப வறுமை காரணமாக தீக்குளித்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜா வீதியில் வசித்து வருபவர்கள் நல்லுச்சாமி (34) முத்துலட்சுமி என்ற ஷோபனா (27) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஹேமா ஸ்ரீ என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் காலை நல்லுச்சாமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது முத்துலட்சுமியும் அவரது மகள் ஹேமாஸ்ரீயும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹேமா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முத்துலட்சுமியை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், நல்லுச்சாமி பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில், முத்துலட்சுமி போடியில் உள்ள தனியார் அச்சகத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாத நிலையில் முத்துலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்த போது அவரது மகள் ஹேமாஸ்ரீ தாயை கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். இதில் இருவரும் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என முத்துலட்சுமியின் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக உடலில் தீ வைத்துக் கொண்டு தாய் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM