ஜப்பானின் நாரா நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் 41 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை சம்பவயிடத்தில் பொலிசார் கைது செய்திருந்தனர்.
67 வயதான ஷின்சோ அபே, ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது நிலைமை கவலைக்கிடம் என்றே கூறப்பட்டு வந்தது.
தற்போது நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணியளவில் ஷின்சோ அபே மீது துப்பாக்கியால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இரத்தம் வழிய மார்பைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால், அப்போதே அவர் ஆபத்தான நிலையில் இருந்தார் என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 41 வயதான நபர் கைதாகியுள்ளார்.
துப்பாக்கி பயன்படுத்த கடுமையான சட்டங்கள் அமுலில் இருக்கும் ஜப்பானில், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தாக்குதல்தாரி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2012 முதல் செப்டம்பர் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றியுள்ளார் அபே, நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தமானவர் ஷின்சோ அபே.