வாரணாசி: தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக வாரணாசி சென்றார். அப்போது ரூ.600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திறன் கொண்ட அட்சய பாத்திர மதிய உணவு சமையல் கூடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து தேசிய கல்வி கொள்கையை அமலாக்குவது குறித்து ஆலோசிக்கும் அகில இந்திய கல்வி மாநாட்டை அவர் தொடங்கிவைத்தார். 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நமது நாட்டில் அறிவு, திறமைக்கு பஞ்சம் கிடையாது. ஆனால் ஆங்கிலேயர் உருவாக்கிய கல்வி முறை இந்திய நெறிமுறைகளுடன் ஒத்துப்போகவில்லை. எனவே குறுகிய சிந்தனையில் இருந்து வெளியேறி, 21 ஆம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் மாணவ, மாணவியரை இணைப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கல்வி முறை, பட்டம் பெற்ற இளைஞர்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன வகையான மனித வளம் தேவையோ, அதற்கேற்ற வகையில் கல்வி முறை இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டிருக்கிறது. புதிய கல்வி புரட்சியை ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது. சம்ஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும். வெகுவிரைவில் உலகின் கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும். இதற்கேற்ப இந்திய உயர் கல்வியை சர்வதேச தரத்துக்கு இணையாக உயர்த்த வேண்டும். நாடு முழுவதும் 180 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க சிறப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர்மோடி பேசும்போது, “ஏழைகள், பழங்குடிகளின் துயரங்களை துடைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது” என்றார்.