தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்; தேசிய பங்குச்சந்தை மாஜி சிஇஓ மாஜி போலீஸ் கமிஷனர் மீது வழக்கு: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு

மும்பை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ)  சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்  ஆகியோர் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பங்குச் சந்தை தகவல்களை கசியவிட்ட புகாரின் அடிப்படையில் மும்பை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயிடம் சமீபத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் பெறப்பட்ட  வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த புதிய வழக்கின் அடிப்படையில், சஞ்சய் பாண்டேவுக்குத் தொடர்புடைய மும்பை, புனே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி மும்பை காவல் ஆணையர் பதவியில் இருந்து சஞ்சய் பாண்டே ஓய்வு பெற்றார். கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அவர் மகாராஷ்டிர மாநில பொறுப்பு டிஜிபியாகவும் பதவி வகித்தார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கடந்த 2009 – 2017ம் ஆண்டுக்கு இடையில் தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. அதனால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, புனே மற்றும் பிற நகரங்களின் 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. கான்பூர் ஐஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த காவல்துறை அதிகாரி சஞ்சய் பாண்டே, தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு பங்குச்சந்தை பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினர். இவரது ராஜினாமாவை மாநில அரசு ஏற்கவில்லை; அதனால் மீண்டும் அவர் பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தை அவரது மனைவியும், மகனும் நிர்வகித்து வருகின்றனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.