"நிறைய பேருக்கு பாட்காஸ்ட்னா என்னன்னு தெரியல. அதனால…"- மா கா பா ஆனந்த், சாந்தனு, கீர்த்தி கலகல!

பிரபல ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மீடியா சேவை வழங்குநரான ஸ்பாட்டிஃபை நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் கிரியேட்டிவ் புரொமோஷன் மற்றும் பிளேலிஸ்ட்கள் மூலம் நிறைய ரசிகர்களைச் சம்பாதித்துள்ளது. அந்த வகையில் மக்களை மேலும் மகிழ்விக்கத் தமிழில் பாட்காஸ்ட் (வலையொளி) ஷோக்களை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தமிழ் பாட்காஸ்டுக்கான பிரத்யேக அறிமுக நிகழ்வு நேற்று (7.7.22) சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. புதிதாக பாட்காஸ்ட் ஷோவைத் துவங்கியிருக்கும் நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி சாந்தனு, விஜய் டிவி புகழ் மா கா பா ஆனந்த் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முதலில், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி சாந்தனு தங்களது பாட்காஸ்ட் ஷோவான ‘ஜாலியோ ஜிம்கானா’ பற்றிப் பகிர்ந்து கொண்டனர்.

மா கா பா ஆனந்த், கீர்த்தி சாந்தனு, சாந்தனு

சாந்தனு பேசும்போது, “எங்கள் இருவருக்கும் இந்த Spotify பாட்காஸ்ட் புது அனுபவத்தைக் கொடுத்துள்ளது. சினிமா ஷூட்டிங் போல் கடுமையாக இல்லாமல் ரொம்ப வசதியாக இருக்கு என்பேன். எங்களுக்குப் பிடித்த அறையில், பிடித்த உடையை மாட்டிக்கொண்டு ஜாலியாக உரையாடிக் கொண்டு வருகிறோம். தற்போதுவரை வெளியாகி இருக்கும் எங்கள் பாட்காஸ்ட்களை கேட்டு பலபேர் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, அப்பாவுக்கு ரொம்ப பிடித்தது. அவரும் அதில் இறங்கி பாட்காஸ்ட் செய்யப் போவதாகச் சொன்னார்.

சினிமாவில் நடித்துக் கொண்டு எதற்காக திடீரென ஆடியோ ஸ்ட்ரீமிங் பக்கம் என யாரும் நினைக்கவேண்டாம்.
எங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்பிலும் மக்களைச் சென்றடைவதே எங்கள் விருப்பம். இப்படித்தான், கமல் சார் தொலைக்காட்சி பக்கம் போனபோது கலாய்த்தார்கள். ஆனால் சமீபத்தில் மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்திற்கு அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சென்றடைந்தது ஒரு முக்கிய காரணம் என்று அவரே சொல்லி இருக்கார். எனவே, தண்ணீரைப் போல எங்கெல்லாம் இடம் கிடைக்குதோ அங்கெல்லாம் புகுந்து நாங்கள் வந்துவிடுவோம். நானும் கீர்த்தியும் இந்த பாட்காஸ்ட் மூலம் உங்களை நிச்சயம் மகிழவைப்போம்” என்றார்.

கீர்த்தி சாந்தனு பேசுகையில், “எங்களை நாங்களாகவே வெளிப்படுத்திக்கொள்ள இந்த பாட்காஸ்ட் ஷோவைப் பயன்படுத்திக் கொள்கிறோம். எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல், மறைத்துப் பேசாமல், ஸ்கிரிப்ட் இல்லாமல் அப்படியே ஆன் தி ஸ்பாட்டில்தான் பேசுகிறோம். அது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. நிறைய ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பிப் பாராட்டுகிறார்கள். மேலும் டாப்பிக்கும் சஜெஸ்ட் செய்கிறார்கள். ரொம்ப ஈஸியாக உலகம் முழுவதும் எல்லாரையும் மகிழ்விக்க முடிகிறது. எனக்கும் சாந்தனுவுக்கும் இடையில் நடக்கும் ஜாலியான விஷயங்களை விடமா கேளுங்க” என்று மகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்.

மா கா பா ஆனந்த், கீர்த்தி சாந்தனு, சாந்தனு

சாந்தனு, கிகி (கீர்த்தி) இருவரும் தங்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாட்காஸ்ட் பற்றி உற்சாகமாகப் பகிர்ந்துகொண்ட பின் மா கா பா ஆனந்த் தன்னுடைய பாட்காஸ்ட் ஷோவான ‘மை டியர் மா கா பா’ பற்றிப் பேசினார்.

“நான் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றிய போதே பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 – 15 வருடங்களுக்கு முன்பே இங்கிலிஷ் பாட்காஸ்ட்கள் கேட்டு இருக்கிறேன். தொலைக்காட்சி பக்கம் வந்து பல வருடங்களான நிலையில், ரேடியோ கேட்டாலே முன்னாள் காதலி போன்ற உணர்வு வரும். சோகம் ஆகிவிடுவேன். ஆனால் இப்போது மறுபடியும் ரேடியோ ஜாக்கி போலவே பாட்காஸ்ட் வடிவில் என்டெர்டெயின் செய்து கொண்டு வருகிறேன். பட், நிறையத் தமிழ் மக்களுக்கு இன்றும் பாட்காஸ்ட் என்றால் என்னவென்று தெரியவில்லை. என்கூட இருக்கும் பசங்க உட்படப் பலருக்கும் தெரியலை. அதனால்தான் பாட்காஸ்ட் என்றால் என்ன என்று ஒரு எபிசோடு செய்தேன். தமிழிலும் பாட்காஸ்ட் கேட்பதற்கான கூட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. எல்லாரும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனக்கஷ்டங்களை விரட்டி அடிப்பது பற்றித்தான் என்னுடைய ஷோ அமைந்து இருக்கும். மக்களிடமிருந்து நிறைய ரேட்டிங் கிடைத்து இருக்கிறது. ரொம்ப சந்தோஷம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.