டெல்லி: பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவு மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் முகமது ஜுபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது திகார் சிறையில் அடைத்தனர். அதனையடுத்து ஜாமீன் வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றத்தில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கினர். அதாவது, ட்விட்டரில் புதிய பதிவுகளை பதிவிடக் கூடாது; உத்திரப்பிரதேசத்தின் சீதாப்பூர் நீதிமன்ற எல்லைப் பகுதியை விட்டு ஜுபைர் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.