இந்திய நிகழ்வுகள்
பிரபல நடிகருக்கு 2 ஆண்டு சிறை
லக்னோ-பிரபல பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ராஜ் பாப்பருக்கு, தேர்தல் அதிகாரியை தாக்கியது தொடர்பான வழக்கில், லக்னோ நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் பாப்பர், 70. ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யான இவர், தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். காங்., கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவராகவும் பதவி வகித்தார்.இவர், 1996ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார்.அப்போது நடந்த தேர்தலின் போது, ஓட்டுச் சாவடியில் பணியில் இருந்த தேர்தல் அதிகாரியை தாக்கியதாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, லக்னோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அரசு ஊழியரை தாக்கிய ராஜ் பாப்பருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 8,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கேரளாவில் குண்டு வெடிப்பு; தந்தை, மகன் பரிதாப பலி
திருவனந்தபுரம்-கேரளாவில் குப்பையில் கிடந்த குண்டு வெடித்து தந்தை, மகன் உயிரிழந்தனர்.வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த பசல்ஹக், அவரது மகன் ஷகதுல் இருவரும் வேலை தேடி சில மாதங்களுக்கு முன் கேரளாவின் கண்ணுாருக்கு வந்தனர். இங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இருவரும், குப்பையில் கிடக்கும் மறுசுழற்சி பொருட்களை சேகரித்து விற்று வந்தனர்.கடந்த சில நாட்களாக சேகரித்த பொருட்களை பிரிக்கும் பணியில் நேற்று காலையில் இருவரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு இரும்புக் குண்டுக்குள் செம்புக் கம்பி இருக்கும் என நினைத்து அதை உடைத்தனர். சுத்தியலால் அடித்த வேகத்தில் அந்தக் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பசல் ஹக் அதே இடத்தில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஷகதுல்லை, பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஷகதுல்லும் இறந்தார். இதுகுறித்து, கண்ணுார் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
எல்லை தாண்டி வந்த பாக்., மீனவர்கள் கைது
புதுடில்லி-குஜராத்தில் எல்லை தாண்டி வந்த நான்கு பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.குஜராத் கடல் பகுதியில், நம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டுஇருந்தனர். அப்போது கட்ச் பகுதி யில் உள்ள ‘ஹராமி நல்லா’ என்ற இடத்தில் பாகிஸ்தான் மீனவர்களின் படகுகள் எல்லை தாண்டி நம் பகுதிக்குள் வந்ததைக் கண்டுபிடித்தனர்.பத்து படகுகளையும் சுற்றி வளைத்து, அதில் இருந்த நான்கு மீனவர்களை கைது செய்தனர். அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.
தமிழக நிகழ்வுகள்
பெற்றோர் கண்டிப்பு: மாணவி தற்கொலை
கடலுார்-பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலுார் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் ரம்யா கிருஷ்ணன், 17; வெள்ளக்கரை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும் மொபைல் போன் பார்ப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த ரம்யா கிருஷ்ணன் கடந்த 26ம் தேதி, வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
பட்டப்பகலில் திருட முயற்சி பெண்ணாடத்தில் பரபரப்பு
பெண்ணாடம்-பெண்ணாடத்தில் பட்டப்பகலின் டாடா ஏஸ் வேனில் இருவர் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெண்ணாடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று மாலை நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு டாடா ஏஸ் வேனில் சென்றனர்.பெண்ணாடம், கிழக்கு மெயின்ரோடு பகுதியில் உள்ள ஓட்டல் முன்பு வேனை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிட சென்றனர்.அப்போது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன், வேனில் இருந்த பைகளை எடுக்க முயன்றார். இதை பார்த்த சாப்பிட சென்றவர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் மற்றும் விருத்தாசலம் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர். இருந்தும் அவர்களை போலீசார் பெயரளவில் விசாரித்து அனுப்பினர்.பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் வேனில் இருவர் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்
நடுவீரப்பட்டு-பாலுாரில் அனுமதி சீட்டில் திருத்தம் செய்து கிராவல் கடத்திய லாரியை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கடலுார் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் அதிகாரிகள் பாலுார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக கிராவல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை (டி.என்.29 ஏ டபுள்யூ 7788) நிறுத்தி சோதனை செய்தார். அனுமதி சீட்டில் திருத்தம் செய்து, திருட்டு தனமாக கிராவல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஓடைப் பகுதியில் மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.அப்போது, மணல் கடத்திய மாட்டு வண்டி உரிமையாளர்கள் தப்பியோடி தலைமறைவாயினர்.இதனால் வருவாய்த் துறையினர் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து திருநாவலுார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து மணல் கடத்திய திருநாவலுாரைச் சேர்ந்த முருகன், கண்ணன், செல்வராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது
விழுப்புரம்-மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் சீனு, 26; இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மனநலம் பாதித்த 14 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார், சீனு மீது போக்சோவில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
உலக நிகழ்வுகள்
இந்திய வம்சாவளிக்கு தூக்கு தண்டனை
சிங்கப்பூர்-சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மலே�யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங், 31, என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ‘கல்வந்த் சிங் ஒரு தபால்காரராகத் தான் பொருளை சேர்ப்பிக்க வந்தாரே தவிர, அதில் இருப்பது போதைப் பொருள் என்பது அவருக்கு தெரியாது’ என, கல்வந்த் சிங் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். கல்வந்த் சிங்கும் கருணை மனுக்களை வழங்கினார்.
ஆனால் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, தண்டனையை நிறுத்தக்கோரி மலே�யாவின் கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் துாதரகம் முன் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். கல்வந்த் சிங் உடன், நோராஷரீ பின் கவுஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் சிறைகளில் துாக்கு தண்டனையை எதிர்நோக்கி, 100க்கும் அதிகமானோர் உள்ளனர். துாக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்யுமாறு, உலக நாடுகள் விடுத்துள்ள கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து உள்ளது. போதை பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கவே, கடுமையான துாக்கு தண்டனை சட்டம் அமல்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்