ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவிலான மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு ஏற்பாடு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார் என கருதிய ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனினும், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயத்தில், பொதுக்குழுவில் ஏற்கனவே இருந்த தீர்மானங்களை தாண்டி புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது. அதன்படியே, அந்தப் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. ஓபிஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே, வரும் 11-ம் தேதி அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணைக்கு நடைபெற்ற நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதம்:
அதிமுக பொதுக்குழு தொடர்பாக முந்தைய பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் வழங்கப்படவில்லை. தற்போது வெளியிட்டதாக கூறப்படும் நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் வினியோகிக்கப்பட்டவை. இந்த பொதுக்குழுவுக்கு 2665 உறுப்பினர்களில் 2190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் இருக்கின்றனர். எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் பொதுக்குழு கூட அனுமதிக்க வேண்டும்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஓபிஎஸ், தான் சார்ந்துள்ள கட்சிக்கு எதிராகவும், உச்ச பட்ச அதிகாரம் பெற்ற பொதுக்குழுவுக்கு எதிராகவும், 2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளதாக கூறும் ஓ பி எஸ், ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. ஆனால் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் பிரதிநித்துவப்படுத்தும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கின்றனர்.
ஜூலை 11 பொதுக்குழு என்று ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. உடனடியாக தொலைக்காட்சிகளில் செய்தியானது. மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியானது. கட்சி உறுப்பினர்கள் அல்லாதோர் கூட தெரிந்து கொண்டனர். அதனால் பொதுக்குழு குறித்து கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக கூற முடியாது. ஜனநாயகம் நிலைக்க வேண்டும். இந்தியாவிலேயே சில கட்சிகளில் தான் உள்கட்சி ஜனநாயகம் உள்ளது.
இவ்வாறு ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM