பொன்னியின் செல்வன் பங்க்ஷன் ரவுண்ட் அப்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியானது.

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமே ரிலீஸ் எப்போது என்று எதிர்ப்பாத்து வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ நாவல் 5 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நாவல் பிற்காலச் சோழப் பேரரசின் பேரரசனான ராஜராஜ சோழனின், வரலாறு கலந்த ஒரு புனைவாகும். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சுபாஷ்கரணின் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்தீபன், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், எழுத்தாளர் ஜெயமோகன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் தமிழர் வரலாற்றை உலகம் அறியும் என்று எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான ஜெயமோகன் கூறினார்.

விழாவில் ஜெயமோகன் பேசியதாவது: “”இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனிடம் கேட்டாலும் சோழர் என்ற பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அது செப்டம்பர் 30-ம் தேதி வரையிலும்தான். இப்படம் வெளியானால் சோழர் மட்டுமல்ல அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகிய அத்தனைப் பெயர்களும் இந்தியா முழுக்கச் சென்று சேர்ந்திருக்கும். அதுதான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி. இனி உங்கள் குழந்தைகளிடம் சோழ வரலாற்றை எளிதில் கொண்டு சேர்க்க முடியும். அவர்களின் நிலம், போர், அரண்மனை, கோட்டை மதில், கதாபாத்திரங்கள் என அனைத்தையும் அவர்களின் கண்முன் காட்ட முடியும். நம்முடைய குழந்தைகள் அமெரிக்கா, ஐரோப்பிய வரலாற்றைத் தெரிந்துகொண்டு வளர்கிறார்கள். இனி அவர்களுக்கு நம் தமிழ் வரலாற்றைச் சொல்லித் தருவோம்” என்று பேசினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி நிகழ்ச்சியில் கூஸ்பம்ப் என்று ஆரம்பித்து பேசுகையில், “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது… ஜெயமோகன் அழகா பேசிட்டாரு. பாரதி பாஸ்கர் ரொம்ப அழகாகப் பேசிட்டாங்க. இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. மணி சாருடைய அசிஸ்டென்ட்டாக, மணி சார்கூட சுமோல பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்… இன்னைக்கு மணி சார் எனக்கு இந்த மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கிறேன்.

நான் ஹிஸ்டரி வகுப்புக்கு பயந்து ஓடுற ஆளு. பாதி நேரம் தூங்கிடுவேன். அப்படி நாம முழிச்சுருக்கற கொஞ்ச நேரம் கூட, நம்மள யாரு ஆண்டாங்க, நம்ம எப்படி சூரையாடப்பட்டோம், நம்ம எப்படி அடிமையானோம் அப்படிங்கிற வரலாற்றைப் படிச்சிருப்போம். நம்ம இப்போ ‘தமிழன் தமிழன்’னு சொல்றோம். அப்படி என்னடா நீ தமிழன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இருக்காது. நம்ம மன்னர்கள் எப்படி இருந்தாங்க, நம்ம நாடு எப்படி இருந்தது, நம்ம அரசாட்சி எப்படி இருந்ததுன்னு கேட்டா நமக்குத் தெரியாது. ஆனா அதை நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. சோழர்களுடைய கல்லணை 2000 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டு இன்னைக்கு வரைக்கும் கம்பீரமா இருக்கு. வீரநாராயண ஏரி 20 கிமீ நீளம், 7 கிமீ அகலம் கொண்டது. அந்த ஏரியைக் கட்டுனது நம்ம சோழன். அஸ்திவாரமே இல்லாம கட்டப்பட்ட நம்ம தஞ்சை பெரிய கோயில் 216 அடி உயரம். வெள்ளைக்காரன்கூட கடலுக்கு வெளியேதான் இருந்தாங்க. கடலுக்குள்ளேயும் போகமுடியும்ன்னு நினைச்சு கடல் தாண்டி போனவங்கதான் நம்ம தமிழர்கள். இன்னைக்கும் தமிழக அரசு பயன்படுத்துற மக்கள் நலத் திட்டங்கள் சோழர்கள் கொண்டு வந்தவை. இன்னும் நிறையா இருக்கு. இதை எல்லாத்தையும் 10 விநாடில படிச்சிட்டு தள்ளிவிட்டுட்டோம். அதைத் திரைப்படம் மாதிரி மணி சார் உருவாக்கியது, அவர் அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கற கிஃப்ட்ன்னு நான் சொல்லுவேன். நம்ம வரலாறு படிக்காம வரலாறு படைக்க முடியாது.

இதுல நான் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பண்ணிருக்கேன். இதை எங்க அம்மாகிட்ட சொல்றப்போ, ‘என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் பண்ணா வந்தியதேவன் மாதிரி ஒருத்தனைத்தான் கல்யாணம் பண்ணணும்னு சொல்லுவாங்க’ன்னு சொன்னாங்க. அதைக் கேட்கும்போது ஷாக்காக இருந்தது. அதெல்லாம் மணி சார் பார்த்துபாருன்னு தைரியத்துல போயிட்டேன். என் நண்பர் ஒருவரிடம் வந்தியத்தேவன் பற்றிக் கேட்டேன். வந்தியத்தேவன் ஐ.ஏ.எஸ் ஆபிஸர் மாதிரி. அவனுக்கு நாடே கிடையாது. ஆனால் அவன் இளவரசன், பேராசை கொண்டவன், ஆனா நேர்மையானவன்னு சொன்னாரு. அது எனக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்க உதவியாக இருந்தது. இந்த புக் படிச்ச பலருக்கும் ஒவ்வொரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை!” என்று பேசினார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்தினம் பேசியதாவது; “கல்கிக்கு என்னுடைய முதல் நன்றி . இந்த திரைப்படம் (பொன்னியின் செல்வன்) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய படம் .நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடித்திற்க வேண்டிய படம்.எதோ ஒரு காரணத்தால் நின்று விட்டது.இன்றைக்கு தான் புரிந்தது எங்களுக்காக விட்டு வைத்து போயிருக்கிறார் என்று.இந்த திரைப்படத்தை எடுக்க நான் 3 முறை முயற்சி செய்தேன்” என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.