பிரித்தானியாவின் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள போரிஸ் ஜோன்சன் இனி தமக்கு மிகவும் பிடித்தமான, எளிதாக செய்து முடிக்கக் கூடிய பணியில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மிக விரைவாக , பெரும் செல்வந்தராக மாறும் வாய்ப்புகள் அவருக்கு கைக்கூடும் என்றே கூறப்படுகிறது.
7 பிள்ளைகளுக்கு தந்தையான 58 வயது போரிஸ் ஜோன்சன், பிரதமராக தாம் பெற்றுவந்த 157,000 பவுண்டுகள் ஊதியம் என்பது மிகக்குறைவு என்றே அடிக்கடி கூறி வந்தார்.
அவர் பிரதமர் பதவிக்கு வரும் முன்னர் தோராயமாக 830,000 பவுண்டுகள் வரையில் ஈட்டி வந்துள்ளார்.
நாளேடுகளில் எழுதுவது, புத்தகங்கள், உரைகள் மற்றும் தொலைக்காட்சியில் தோன்றுவது என பெருந்தொகை ஊதியமாக பெற்றுவந்தார்.
மட்டுமின்றி நாளேடு ஒன்றில் அவர் எழுதி வந்த chicken feed என்ற பத்திக்கு 250,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்றதாக ஒருமுறை கூறியுள்ளார்.
2009ல், லண்டன் மேயராக வலம் வந்த காலகட்டத்தில், தமக்கு நாளேடுகளில் எழுதுவது என்பது மிகவும் பிடித்தமானதும், எளிதாக செய்யக்கூடிய பணிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமது இதுவரையான அரசியல், வாழ்க்கை சூழல்களை நினைவுக்குறிப்பாக எழுத நிறுவனம் ஒன்று அணுகியுள்ளதாகவும், 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் அதிலிருந்து அவர் ஈட்ட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, நட்சத்திர பேச்சாளராக போரிஸ் ஜோன்சன் களமிறங்க கூடும் எனவும், பொதுவாக அவ்வாறான பேச்சாளர்களுக்கு, ஒவ்வொரு உரைக்கும் 100,000 பவுண்டுகள் வரையில் ஊதியமாக வழங்கப்படுவதாகவும், அந்த வகையில் ஆண்டுக்கு 10 வாய்ப்புகள் அமைந்தால் போரிஸ் ஜோன்சன் மிகப் பெரிய தொகையை ஈட்டலாம் எனவும் கூறுகின்றனர்.