ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் கந்தசாமி. இவர் வழக்கு தொடர்பான விசாரணைக்காக அருகேயுள்ள ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும் வழியில் போலீஸ் சீருடையில் மதுஅருந்தியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி, தனக்கு பழக்கமான மற்றொருவருடன் மதுபானக்கடை பாரில் அமர்ந்து மதுஅருந்துவதும் உடனிருக்கும் நபருக்கு தின்பண்டம், வாழைப்பழம் கொடுப்பதும் பதிவாகியுள்ளது.
மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்பவர்களை தடுக்கவும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டிப்பு செய்யவேண்டியவர்களுமான காவல்துறையினரே வேலை நேரத்தில் சீருடையுடன் மது அருந்துவது சமூக வலைதளங்களில் பரவி வருவது பொதுமக்களிடையே பேசுப்பொருளாகி உள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் பேசினோம். “பணி நேரத்தில் சீருடையில் மது அருந்திய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி மீதான புகார் காரணமாக, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.