`மயிலாடுதுறை' ஒரு அலசல்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மயிலாடுதுறை என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மயில்கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் மாயூரநாதர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி அபயாம்பிக்கை மயில் வடிவில் காட்சியளிக்கிறார். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட திருத்தலம் இது.

ஐந்தாம் திருமுறையில் அப்பர் பெருமான் “வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்மஞ்சன் மாமயி லாடு துறையுறைஅஞ்சொ லாளுமை பங்க னருளிலே… ” என்று பாடியுள்ளார்.

மயிலாடுதுறையிலிருந்து அருள் பாலிக்கும் சிவனை வணங்கினால் காலன் நம்மிடம் விரைந்து வரமாட்டான். அஞ்சத்தகுவனவாகிய பிறப்பு இறப்பு அறுக்கலாம் என்றும் தெளிவாக சொல்லி உள்ளார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மூவர் வாழ்ந்த காலந்தொட்டே மயிலாடுதுறை சீரோடும் சிறப்போடும் இருந்து வருகிறது. அதன் பெருமைகளைப் இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை : மயிலாடுதுறையின் பெருமைக்கு பெருமை சேர்த்து உயரே கொண்டு சென்றவர் வேதநாயகம் பிள்ளை அவர்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ -தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவர் இவர்தான். திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்த இவர் சுமார் 13 ஆண்டுகள் மாயூரம் முன்சீப்பாக பணி புரிந்ததால் ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார். நீதிமன்றங்களில் மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற பெயரில் 1862 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முதன் முதலில் மொழிபெயர்த்த தமிழறிஞர் இவர்தான்.

1879 ஆம் ஆண்டு ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூலை வெளியிட்டார். பிரதாப முதலியார் அவர் மனைவி ஞானம்பாள் இந்த இருவரின் வாழ்வியலை அற்புதமாக விளக்கி உள்ளார். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். பெண் மதி மாலை என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இதில் பெண்களுக்கான அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடையிலும் விளக்கி உள்ளார். சுகுண சுந்தரி நாவல் 1887 ஆம்ஆண்டு வெளிவந்தது. அதில் பால்ய விவாக கொடுமைகள் பற்றியும் பெண் கல்வி பற்றியும் சமுதாயத்துக்கு தேவையான முற்போக்கு கருத்துக்களையும் கூறியுள்ளார். பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடம் மாயவரத்தில் திறந்தார்.

மயிலாடுதுறை

தமிழகத்தின் முதல் பெண்கள் பள்ளி அதுதான். திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி போன்ற நூல்களையும் தந்துள்ளார். அக்காலத்தில் மிகப்பெரிய பஞ்சம் வந்த போது தனது சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கினார். இதை போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார்

நீயே புருஷ மேரு – உலகில் நிலைத்தது நின்பேரு – நீதிபதி ஆயிரம் ஆயினும் மாயூரம் ஆமோ ஐயநின் பெருமையை அளந்திடப் போமோ இயல் இசையுடன் கலை எல்லவும் ஆர்ந்தாய் ஏழை மக்கள் உறவே இனிதெனத் தேர்ந்தாய் மயலறும் சமரச மார்க்கமும் சார்ந்தாய் வளர்வேத நாயக மலரென நேர்ந்தாய்…

என்று கீர்த்தனையாக பாடியுள்ளார்.

ஆதீனங்கள் :

“மயிலாடுதுறையின் மற்றொரு பெருமை மிக்க அடையாளமாக கருதப்படுவது தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்கள். ஆதீனங்கள் மூலம் தமிழ் வளர்ச்சி அடைந்தது. பள்ளிகள் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தருமபுர ஆதீனம் : குரு.ஞானசம்பந்தர் அவர்களால் 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. சொக்கநாத வெண்பா சொக்கநாத கலித்துறை உட்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். சமயப் பணிகளோடு கல்வி பணிகளும் ஆதினகர்த்தாக்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். கலை கல்லூரி ஆரம்பப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் என்று ஏராளமாக இந்த ஆதீனம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்கள் கல்வியில் மேம்பட வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளார்கள். புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்கள் அமைய ஆதீனத்தால் 21 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது.

தருமபுர ஆதீனம்

திருவாடுதுறை ஆதீனம் : திருவாவடுதுறை ஆதீனத்தை தோற்றுவித்தவர் நமசிவாய மூர்த்தி சுவாமிகள். 500 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை வெளியிட்டும் மறுபதிப்பு செய்து தமிழுக்கு சிறப்பான தொண்டாற்றி வருகிறது இந்த ஆதீனம். இங்குள்ள நூலகத்தில் பல அரிய நூல்களும் ஏட்டு சுவடிகளும் உள்ளன. இந்த ஆதீனத்திற்கு சொந்தமான கோமுக்தீஸ்வரர் கோயிலில்தான் திருமூலர் திருமந்திரம் இயற்றி அருளினார். இந்த ஆதீனப் பள்ளியின் புகழ்பெற்ற ஆசிரியர்கள் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, புலவர் கீரன் ச.தண்டபாணி தேசிகர் ஆகியோர். புகழ்பெற்ற மாணவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் : இராமாயணம் தந்த கம்பர் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழந்தூர் என்ற கிராமத்தில் தான் பிறந்தார். ‘அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்…கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்…தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க… இந்த பாடல்கள்/வரிகள் எங்கெங்கு ஒலிக்கிறதோ அங்கிருந்து வரும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழோசை தேரழந்தூர் வழியாக மயிலாடுதுறை வந்து சேர்ந்து மேலும் மேலும் புகழ் சேர்க்கும்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை : நாதஸ்வரம்-நம்மை மெய்மறக்க செய்யும் இசைக்கருவி. அது ஒரு சிலருக்கு மட்டுமே அடிமையாக இருக்கும். அவர்கள் அதை தொட்டு வாசிக்கும் போது அதுவே… அந்த கருவியே தன்னிலை மறந்து போகும். அப்படிப்பட்ட சிலரில் முதலிடத்தில் இருப்பவர் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். மயிலாடுதுறைக்கு தனது வாசிப்பு திறனால் பெருமை சேர்த்தவர். இறைவனோடு நம்மை இணைக்கும் பணியை செய்வது இந்த நாதஸ்வரமே. ஆரம்ப காலத்தில் திமிரி நாதஸ்வரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் நீளம் குறைவாக இருக்கும். தற்போது இருக்கும் நாதஸ்வரத்தை வடிவமைத்தவர் பிள்ளை அவர்கள்தான். அதற்கு பெயர் பாரி நாதஸ்வரம். அவர் வாசிக்கும் தோடி ராகத்தை ரெக்கார்ட் பிளேட்டாக வெளியிட்டது ஏ.வி.எம். நிறுவனம். உலகெங்கும் விற்பனையில் சாதனை படைத்தது அது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது வானொலியில் பிள்ளை அவர்களின் நாதஸ்வர இசை ஒலிபரப்பப்பட்டது. இன்றும் இசை உலகில் பல்வேறு ராகங்கள் வடிவில் வாழ்ந்து கொண்டு ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

ஐப்பசி மாத கடைசி நாளில் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற கடை முழுக்கும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கும் நடைபெறும். ஒருங்கிணைந்த முன்னாள் தஞ்சை மாவட்டத்தை தனது நீர்க்கரங்களால் தொட்டு செழிப்பாக்கிய காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் ஆடிப்பெருக்கு. அதே காவிரியில் கடை முழுக்கு முடவன் முழுக்கு ஆகிய இரண்டு நாட்களில் புனித நீராடி தங்களை புனிதமாக்கி கொள்ள இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

காவிரி தீர்த்தம்

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்ட அன்பனாதபுரம் வகையறாக்களை சேர்ந்த புரவலர்களால் உருவானதுதான் 70 வது ஆண்டை தொட இருக்கும் A.V.C. கல்லூரி. இந்த கல்லூரி இதழின் சின்னம் மயிலாடுதுறையை நினைவுப்படுத்தும் விதமாகவும் அன்பனாதபுரம் வகையறாக்களை நினைவுப்படுத்தும் விதமாகவும் PEKAK என்று பொருத்தமாக வைத்துள்ளார்கள். அதாவது PALLAVARAYANPETTAI, ENATHIMANGALAM, KARUGUDI, ANPANATHAPURAM, KANGANAMPUTHTHUR ஆகிய கிராமங்களின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை பயன்படுத்தி வைத்துள்ளார்கள்.

திரு.ரத்தின. பாலசுப்ரமணியன் கல்லூரி முதல்வராக இருந்த போது நான் அந்த கல்லூரியில் பி.ஏ. பொருளியல் படித்தேன். திரு.சிவபுண்ணியம், திரு,சோ.சிங்காரவேலனார் திரு.கோபகுமார், திரு.செம்பியன் திரு.எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்போது தன்னாட்சி பெற்று மேலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் கொண்டு வந்துவிட்டார்கள்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, பூண்டி புட்பம் கல்லூரி, மயிலாடுதுறை A.V.C. கல்லூரி இவைகள் மூன்றுமே நமது தாத்தா காலத்திலிருந்தே பெயர் பெற்ற கல்லூரிகள். கலைத்துறையில் சகலகலா வல்லவராக திகழ்ந்து வரும் திரு.டி.ராஜேந்தர் அவர்கள் இங்கேதான் படித்தார்.

மயிலாடுதுறை

கூடுதலாக ஒன்று சொல்லலாம். சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் தேவையான அனைத்தையும் வாங்க பாரம்பரிய மிக்க ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இங்கு உள்ளது.

இசையால், தமிழால்,கல்வியால் வளர்ந்து கொண்டே இருக்கும் மயிலாடுதுறை ஒரு மேட்டூர் ஆகும். இசை பிரியர்களுக்கு, தமிழ் ஆர்வலர்களுக்கு, கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் தேக்கி வைத்து மூடாமல் தொடர்ந்து அளித்து வருகிறது வேறு எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக செய்து வரும் மயிலாடுதுறையை போற்றிப்படுவோம்..

பின் குறிப்பு : “மயிலாடுதுறை சீமாட்டி சில்க்ஸ் சார்பாக ‘மயிலாடுதுறையின் சிறப்பு’ பற்றி எழுதச் சொல்லி ஒரு போட்டி வைத்தார்கள். அந்த போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 10,000/- எனக்கு இந்த கட்டுரைக்கு வழங்கினார்கள். அதை அனைவரின் பார்வைக்கு விகடன் இணையதளம் மூலமாக பகிர்ந்துள்ளேன்.

திருமாளம் எஸ்.பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.