சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவர் குர்பீரித் கவுன் என்பவரை நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு பக்வந்த் தனியாக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கி வெற்றி பெற்றார். பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. முதல்வராக பக்வந்த் மான் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதல்வர் பக்வந்த் நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அரியானா மாநிலம், குருஷேத்ராவை சேர்ந்த மருத்துவர் குர்பீரித் கவுர் என்பவரை சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்: எனது சகோதரரும், பஞ்சாப் முதல்வருமான பக்வந்த் மான் திருமணம் செய்து கொண்டு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியான தருணமாகும். தம்பதிகள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,’ என்றார்.