தொடர் மழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: ஏற்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் பரிசலில் மாயாற்றை கடக்கும் மக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியமங்கலம், பவானிசாகர் கோத்தகிரி ஆகிய பகுதிக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுவதால் பரிசல் மூலம் மட்டுமே மாயாற்றை கடந்து செல்ல இயலும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசலில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அன்றாட தேவைகள் மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் காலை நேரத்தில் ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கின்றனர்.
தற்போது பரிசல் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கல்லம்பாளையம் அள்ளிமாயார் சித்திராம்பட்டி புதுக்காடு தெங்குமரஹாடா ஆகிய கிராமமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இப்பகுதியில் உற்பத்தியாகும் வாழை, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளை வெளியூருக்கு கொண்டு செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடக்கியுள்ளது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லம்பாளையம் மற்றும் தெங்குமரஹாடா உயர்மட்ட பாலம் கட்டும் திட்டத்தை உடனே நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM