சசிகலா கடந்த சில நாட்களாக தொகுதி வாரியாக சென்று ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அவ்வப்போது அதிமுக நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அதே பகுதியை சார்ந்த அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு துணைத் தலைவர் பிரேம்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அதிமுகவில் எந்த தொடர்பும் இல்லாத சசிகலா திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை (இன்று) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதிமுக கொடியை அவர் ஏற்றக்கூடாது.
அதிமுக தோரணங்களை சாலையோரம் கட்டக்கூடாது. சுவரொட்டி மற்றும் பேனர்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் படங்கள் பயன்படுத்தக்கூடாது. மீறும் பட்சத்தில் அதிமுக தொண்டர்களுக்கும், சசிகலா தொண்டர்களுக்கும் பெரும் பதற்றமும், சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சசிகலா சுற்றுப்பயணத்தின் போது அதிமுக கொடி தோரணங்களை பயன்படுத்த காவல்துறை அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.