புதுடெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் பரவியதில் இருந்து பல நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 73% இந்திய நிறுவனங்கள் வீட்டில் இருந்தும் அலுவலகம் வந்து பணியாற்றும் கலவையான வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன.
நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு குறைந்தது. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.
இப்போது புதிய மாற்றமாக கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்தனர். ஊழியர்கள் பெருமளவு ராஜினாமா செய்யும் போக்கு இந்த ஆண்டும் தொடர்கிறது. குறிப்பாக ஐடி துறையில் ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
‘ஹைபீரிடு’ வேலைமுறை
இப்போது பெருமளவு ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்தும், அலுவலகம் வந்து வேலை செய்யும், ஹைபீரிடு எனப்படும் கலவையான வேலை முறையை அமலில் வைத்துள்ளன. வீட்டில் இருந்து வேலை என்ற நடைமுறையை தொழிலாளர் நல சட்ட உரிமையாக மாற்றுவதற்கு நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. விரைவில் இந்தியாவிலும் இதற்கான சூழல் உருவாகும் நிலை உள்ளது.
இதனிடையே இந்தியா உட்பட பல நாடுகளிலும் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ஐடித்துறை மட்டுமல்லாமல் வேறு சில துறைகளிலும் அலுவலகம் வந்து பணியாற்றிய ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவியதில் இருந்து பல நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் 73% இந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்கால வேலை மாதிரியின் ஒரு பகுதியாக கலவையான வேலை முறையை அமல்படுத்துவதா என ஆலோசித்து வருவதாக புதிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
புதிய சர்வே என்ன சொல்கிறது?
சிபிஆர்இ சவுத் ஏசியா என்ற பிரபல கருத்து சேகரிப்பு ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படும் திறனைக் கண்டுள்ளன. இந்தியாவில் 73% நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு கலவையான வேலை முறை அதாவது வீட்டில் இருந்தும், அலுவலகம் வந்தும் வேலை செய்யும் முறையிலான பணிமுறையை அமல்படுத்த பரிசீலித்து வருகின்றன.
இந்த வேலை முறைகளில், குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கான தொலைதூர வேலை, வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலக நாட்கள், அலுவலகம் மற்றும் தொலைதூர வேலை ஆகியவற்றின் சம கலவை மற்றும் வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தொலைதூர வேலை ஆகியவை சேர்ந்ததாகும்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவியதில் இருந்து திறமைசாலிகளை ஈர்ப்பதிலும் தக்கவைப்பதிலும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன. 78% நிறுவனங்கள் இந்த ஆண்டு இது மிகப்பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகின்றன. இதில் பெரும்பாலானவை ஐடி உள்ளிட்ட ஆன்லைனில் செயல்பட வாய்ப்புள்ள நிறுவனங்களாகும். எனவே இந்த நிறுவனங்கள் கலவையான வேலை முறையை நிரந்தரமாக மாற்றி விடலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே வில்லிஸ் டவர்ஸ் வாட்ஸன் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை மையப்படுத்தி பணி செய்யும் நிறுவனங்கள் கலவையான வேலை முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. முக்கியமாக அலுவலகம் சார்ந்த மற்றும் தொலைதூர வேலைகளின் சம கலவையாக இருப்பதை விரும்புகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், திறமைகளை ஈர்ப்பதிலும் தக்கவைத்துக்கொள்வதிலும் சிரமங்களை அனுபவிக்கும் நாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 78% திறமைகளை ஈர்க்கும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. தக்கவைப்பு சவாலை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2022 இல் 64% ஆக குறைந்துள்ளது. திறமைகளை ஈர்க்கும் சவால்களை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் எண்ணிக்கை விரைவில் 78% ஆக உயரும்.
அதேசமயம் ஊழியர்களின் மனநிலை என்ன என்பது குறித்து அவர்களிடமும் கருத்துக் கேட்டோம். அவர்கள் கூறிய பதிலின்படி ஏறக்கறைய 38% பேர் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து வேலையை வேலையைச் சமமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 35% பேர் வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலக நாட்களை அனுமதிப்பதாகக் கூறியுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.