மாஸ்கோ: “முடிந்தால் போரில் எங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்” என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் ஆற்றிய உரையில், “உக்ரைனில் போர் தொடுக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இருந்தததில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகள்தான் ரஷ்யாவை தோற்கடிக்க நினைக்கின்றன. கடைசி உக்ரைனியர்கள் இருக்கும்வரை மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுடன் போர் புரியும் என்று மேற்கத்திய நாடுகள் கூறுவதை நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். முடிந்தால் போரில் எங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள். என்ன சொல்வது… அவர்கள் முயற்சிக்கட்டும். உக்ரைன் மக்களுக்கு இது பெரும் சோகம்.
ரஷ்யா பெரிய அளவில் இந்தப் போரினை தொடங்கவே இல்லை என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். உக்ரைனை மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியும் எங்கள் மீது மறைமுகப் போரை மேற்கத்திய நாடுகள் நடத்துக்கின்றன. இந்தச் சூழலிலும் அமைதி பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையை மறுப்பவர்கள் காலம் கடக்க கடக்க எங்களுடனான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு கடினமாகும் என்பதை உணர வேண்டும்” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மாதக் கணக்கில் இந்தப் போர் தொடர்ந்து நடக்கிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.