முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

சவுத்தம்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் 4 ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மாலன் 21 ரன்கள், ஹேரி புரூக் 28 ரன்கள், மொயீன் அலி 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். கிறிஸ் ஜோர்டான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.