சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.41 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை செய்தனர்.
அதேபோல மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி.குமார், வேட்டைத் திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜ் சம்பந்தியின் வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் தங்கம் ஐபோன், ஆவணங்கள், வங்கி பெட்டி சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.