மேம்பாலத்தின்கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளிப்பேருந்து! மாணவர்களை மக்கள் மீட்ட வீடியோ!

தெலுங்கானாவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி பேருந்தில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ராம் சந்திரபூர், மச்சன்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மகபூப்நகர் நோக்கி தனியார் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் போது அங்கு தேங்கியிருந்த நீரில் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது.

அப்பகுதியில் மழைநீரால் சாலையில் நிரம்பியதால், சுமார் 30 மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கியதாக கூறப்படுகிறது. பேருந்திற்குள் நீர் புகுந்ததால் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் அலறியுள்ளனர். இதையடுத்து அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் பேருந்துக்குள் சிக்கித் தவித்த 30 பள்ளி மாணவர்கள் எவ்வித காயங்களும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகபூப்நகர் துணை போலீஸ் கமிஷனர் “இந்த சம்பவம் காலை 9 மணியளவில் நடந்தது. தண்ணீர் இவ்வளவு ஆழமாக இருக்கும் என்று ஓட்டுநர் எதிர்பார்க்கவில்லை. பேருந்துக்குள் தண்ணீர் வரத் தொடங்கியதைக் கண்டு அவர் வாகனத்தை நிறுத்தி விட்டார். உடனடியாக அப்பகுதியினர் உதவியுடன் பள்ளி குழந்தைகள் மீட்கப்பட்டனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிராக்டரைப் பயன்படுத்தி பேருந்தும் அகற்றப்பட்டது.  அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களின் சரியான நேரத்தில் உதவியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.