க. சண்முகவடிவேல்
தமிழக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் நடைபெற்று பெரும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அதிமுக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:-
”லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் சோதனையில் சிக்குபவர்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது வாடிக்கை தான். அதை விடுத்து தங்கள் வீட்டில் சோதனை நடந்தால் நியாயமானது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். யாரையும் பழிவாங்கும் எண்ணம் தமிழக முதல்வருக்கு கிடையாது. சட்டப்படியே சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கும் தற்போது நடக்கும் சோதனைக்கும் சம்பந்தமில்லை.
பொதுவுடமைக் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தகுந்த ஆதாரத்துடன்தான் சோதனை நடைபெற்று வருகிறது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு தான் சோதனையானது நடைபெறுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு தகுந்த ஆதாரங்களுடன் அனைத்து சாட்சிகளின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர சோதனை நடந்த உடனே வழக்குப்பதிவு செய்ய முடியாது.
பேரறிவாளன் விடுதலையாகியுள்ள நிலையில் மீதமுள்ள 6 பேர் உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். தமிழக அரசை பொருத்தவரை அவர்கள் பரோல் கேட்கும்போது கொடுத்து வருகிறோம். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உள்ளது. அவர்கள் உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் போதுதான் அதற்கான தகுந்த தீர்ப்பை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றம் வழங்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், ”தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கப் போவதாக பாஜகவினர் கூறி வருகின்றனரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒன்றுபட்ட தமிழகமாக இருந்தாலும் சரி, பல்லவ நாடு, பாண்டியநாடு என அவர்களது அதிகாரத்தை வைத்து பிரித்தாலும் சரி, திராவிட மாடல் ஆட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil