ராமநாதபுரம் | ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்: இருக்கைகள் வீச்சு, தொண்டர்கள் மண்டை உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருக்கைகள் வீசப்பட்டன. இரு தொண்டர்களுக்கு மண்டை உடைந்தது. கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மஹாலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆக்குவது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி, அதிமுக மகளிரணி மாநில இணைச்செயலாளர் கீர்த்திகா உள்ளிட்ட ஏராளாமன நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி நிர்வாகி கவிதா சசிக்குமார் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மஹாலுக்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் வாழ்க என கூச்சலிட்டவாறு அங்கிருந்த இருக்கைகளை தூக்கி தொண்டர்கள் மீது சரமாரியாக வீசினர். பதிலுக்கு அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இருக்கைகளை தூக்கி வீசினர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது இருக்கைகளை வீசி மஹாலுக்குள் வெளியே விரட்டினர். இதனால் இருக்கைகள் பேருந்து நிலையம் செல்லும் சாலை வரை சிதறிக் கிடந்தன. பின்னர் அங்கிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தப்பினர்.

ஒருவருக்கொருவர் இருக்கைகளை வீசியதில் அதிமுக புத்தேந்தல் கிளை செயலாளர் சந்திரன், இடையர்வலசை கிளை செயலாளர் மணிபாரதி ஆகியோருக்கு மண்டை உடைந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அவர்களை கட்சியினரும், போலீஸாரும் ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோதலின்போது கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுகவினருக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த வடைகளும் மஹாலின் ஒரு பகுதியில் சிதறிக் கிடந்தன. மஹாலுக்கு வெளியே நின்றிருந்த இரண்டு கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. தொடர்ந்து பாதுகாப்புக்கு அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்க வேண்டும் எனவும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து மகளிரணி மாநில இணைச் செயலாளர் கீர்த்திகா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பழனிச்சாமியை பொதுச்செயலாளராக கொண்டு வருவதாக அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரின் படம் வைக்கவில்லை எனக்கூறி ஒரு கும்பல் இருக்கைகளை வீசினர். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.