'லத்தி'யில் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை
நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் லத்தி. புது இயக்குநர் வினோத் குமார் இயக்கி வருகிறார். விஷால், சுனைனா, லய்ரிஷ் ராகவ், ரமணா, சன்னி, வினோத் வினோதினி, முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் காவல்துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள்களின் வாழ்வியலை ஆக்ஷன் கலந்து சொல்லும் படமாக உருவாகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வினோத்குமார் கூறியதாவது: நம் மாநிலத்தில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. அவர்களை நிர்வாகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் 'லத்தி' தான். அதன் வேல்யூ பத்தியும் படம் பேசும். இதில் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயது பையனுக்குத் தகப்பனாக நடிக்கிறார். அவரது மனைவியாக சுனைனா நடிக்கிறார். சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த பிரமாண்ட படபிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இறுதி கட்டமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது. என்கிறார் வினோத்குமார்.