வில்லியனுார்:வில்லியனுார் அருகே, சாலை விபத்து தொடர்பான வழக்கில், இழப்பீடு கேட்டு ‘நோட்டீஸ்’ வந்ததால், மன உளைச்சலில் இருந்த வாலிபர், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் கார் வீதியை சேர்ந்தவர் பாபு; டிரைவர். இவரது மகன் விஷ்ணுகுமார், 17; பிளஸ் 2 முடித்துள்ளார்.கடந்த மார்ச் 9ம் தேதி, ‘பல்சர்’ மோட்டார் பைக்கில், பத்துக்கண்ணு பகுதிக்கு சென்றார். அப்போது அவரது பைக், ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் தமிழ்ச்செல்வியுடன் வந்த அவரது தாய்க்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருந்து பாபு வீட்டிற்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் வந்தது.
இதை அறிந்த விஷ்ணுகுமார் கவலை அடைந்தார். குடும்பம் வறுமையில் உள்ள நிலையில் மூன்று லட்சம் ரூபாய் எப்படி கொடுக்கமுடியும் என்று மன உளைச்சலில் இருந்தார்.
கடந்த 3ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுகுமார் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.பெற்றோர் மாலை வீடு திரும்பியபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 5ம் தேதி இரவு இறந்தார்.இது குறித்து பாபு கொடுத்த புகாரின் படி, வில்லியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வைரலாகும் ‘வீடியோ’
விஷ்ணுகுமார் எலி மருந்து சாப்பிட்ட பின், தன் மொபைல் போனில் தற்கொலைக்கான காரணத்தை கூறி பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:லேசான விபத்தை பெரிதுபடுத்தி வழக்கு பதிந்துள்ளனர்.
எங்களால் மூன்று லட்சம் ரூபாய் தர முடியாத சூழ்நிலையில் இருப்பதால், நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.மிகுந்த மன உளைச்சல் காரணமாக எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். என் இறப்புக்கு, போக்குவரத்து போலீசார் மற்றும் புகார் கொடுத்த பெண் தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement