லண்டன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன.
ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்தார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் இருந்து ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை பதம்பார்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாமில் இறுதிப்போட்டிக்கு வந்த முதல் கஜகஸ்தான் நாட்டவர் என்ற சிறப்பை பெற்ற 23 வயதான ரைபகினா நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆட்டத்தில் ஜபீருடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
முன்னதாக நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவைச் சேர்ந்த 14-ம் நிலை வீரரான டெய்லர் பிரைட்சை தோற்கடித்து 8-வது முறையாக விம்பிள்டனில் அரைஇறுதிக்குள் கால்பதித்தார்.
வெற்றிக்கு பிறகு பேசிய நடால், ‘ஒரு கட்டத்தில் ஆட்டத்தை என்னால் முழுமையாக முடிக்க முடியுமா என்று கூட தோன்றியது. அரைஇறுதி ஆட்டத்தில் களம் இறங்குவேனா என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் அதற்குள் தயாராகி விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
ஆண்கள் பிரிவில் இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- கேமரூன் நோரி (இங்கிலாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்)- நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) மோதுகிறார்கள்.