மணிரத்னம் இயக்கும் ‘அஞ்சலி’ படப்பிடிப்பில் ரேவதியைப் பார்த்துப் பேட்டி என்று முதலில் கேட்டபோது, “ஸாரி.. இப்பல்லாம் நான் இன்டர்வியூவே கொடுக்கறதில்லை…” என்று இரண்டு முறை மறுத்தார். “நீங்கள் நடிக்கும் ‘இரவில் ஒரு பகல்’ டி.வி. தொடரைப் பற்றிப் பேசுவதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லையே…?” என்ற கேள்வியுடன் காஷ்வலாகத் தொடங்கியது பேட்டி.
‘அந்த டி.வி. தொடர்ல பார்வையிழந்த பெண்ணா நடிக்கிறேன்.
ஏற்கெனவே ‘கை கொடுக்கும் கை’ படத்துல நான் அதுமாதிரி நடிச்சிருக்கேன். இந்த சீரியல்ல பார்வையிழந்த பெண்ணா நடிக்கறதுக்கு நான் எதுவும் எக்ஸ்ட்ரா அப்சர்வேஷன் அதாவது, நிஜமாகவே பார்வையிழந்த ஒரு பெண் எப்படி நடக்கிறாள்னு கவனிச்சுப் பண்ணியதில்லை. தவிர, அந்தத் தொடர்ல வர்ற பங்களா என் சிநேகிதியோடது. அந்த பங்களாவின். மூலைமுடுக்கெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். அதனால சுலபமா நடந்து போக வர முடிஞ்சுது.”
“விருதுகளைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?”
“அது நடிகர்களை என்கரேஜ் பண்றது. ‘அவார்டு’ங்கறது நடிப்புத் திறமைக்கு இன்ஸன்டிவ் தர்ற மாதிரி. நானும் ஃபிலிம்ஃபேர் அவார்டு, சினிமா எக்ஸ்பிரஸ் அவார்டு வாங்கியிருக்கேன். ஆனாலும், விருதுகள் என்னைப் பாதிப்பதில்லை. அவார்டு வாங்கினாலும் வாங்கலேன்னாலும், நான் சாதாரணமாகத்தான் இருப்பேன். என்னைப் பொறுத்தவரை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எப்படிப் பண்ணியிருக்கேன்ங்கறதுல கவனமா இருப்பேன். திருப்தியா நடிக்கறதுதான் எனக்கு விருது மாதிரி…”
“நீங்கள் ரிசர்வ்டு டைப்பா? சோஷியல் டைப்பா?” சிரிக்கிறார்.
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, “தெரியலை… நான் என்ன டைப்புனு சொல்லத் தெரியலை. சிலர் சொல்றாங்க “ரேவதி ரொம்ப கர்வம் பிடிச்சவ. சரியா பேசமாட்டாள்”னு. சிலர், “ரேவதி கலகலன்னு பேசுவாங்க”னு சொல்றாங்க. நான் எப்பவுமே பொது இடங்கள்லகூட வாய்விட்டுச் சிரிச்சுத் தான் பழக்கம். பல பேர் பலவிதமா சொன்னாலும் என்னைப் பொறுத்த வரையில நான் ரொம்ப ரிசர்வ்டு கிடையாது. எல்லார்கிட்டேயும் பேசுவேன்.”
“நட்சத்திரம்’ என்ற அந்தஸ்து உங்களை எப்போதாவது பாதித்திருக்கிறதா?”
“எனக்கு அப்பா, அம்மா கொண்டு கணவர் வரை திருப்திகரமா அமைஞ்சிருக்கு. ஒரேயொரு அதிகப்படியான தன்மை என்னன்னா, நான் ஒரு நடிகைங்கறதுதான். எனக்குள்ளே அந்த இமேஜ் பத்தின தற்பெருமை. அதை – என்ன சொல்றது? எனக்குத் தேவையான ஷாப்பிங், காய்கறி வாங்கறது, ஜவுளிக் கடைக்குப் போறது… எல்லாமே நான் தான் செய்யறேன். மூணு நாட்களுக்கு முன்புகூட சைக்கிள் எடுத்துக்கிட்டுச் சின்னப் பசங்களோடு சேர்ந்து ரவுண்ட் அடிச்சிட்டுத்தான் வந்தேன். என்னை ஒரு வளையத்துக்குள்ளே அடைச்சுக்கறதில்லை. ஒரு சாதாரணப் பெண்ணாகவே நடந்துக்கறேன்.”
“அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையுண்டா?”
“அதிர்ஷ்டம் அதிகமா தேவைப்படறது கல்யாண விஷயத்துலதான். ஒரு நல்ல கணவரைப் பெறுவது எழுபத்தைந்து சதவிகிதம் அதிர்ஷ்டம். மீறி இருபத்தைந்து சதவிகிதம் விட்டுக் கொடுத்தலின் அடிப்படை. அந்த விஷயத்துல நான் அதிர்ஷ்டசாலி. சினிமாவிலனு எடுத்துக்கிட்டா, சில படங்கள்ல நல்ல ரோல்ல நடிச்சிருப்பேன். படம் சரியா ஓடாது. ஆரம்பத்துல காரெக்டர் இந்த மாதிரினு முடிவு செஞ்சிருந்தாலும், படமா வரும்போது அது மாறியிருக்கும். அது ஜனங்களுக்கு அந்த மாதிரி சமயங்கள்ல படம் ஓடறதுகூட அதிர்ஷ்டம்னுதான் சொல்ல வேண்டியிருக்கு.”
“எந்த மொழிப் படங்களில் நடிப்பது உங்களுக்குச் சுலபம்?”
“தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பண்றேன். நடிக்கும் போது டயலாக் புரிஞ்சாத்தான் அதுக்கேத்த மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்க முடியும். மொழி புரியலேன்னா, நடிக்க வராது. புரியாத மொழியில உதடு அசைச்சு நடிச்சுட்டுப் போறதுக்கு ரொம்பத் திறமை வேணும். அது என்னால முடியாது. கன்னடப் படங்களுக்குக் கதை சொல்லும்போது, ‘எனக்கு டயம் கொடுங்க. ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரை விட்டு டயலாக் சொல்லித் தரச் சொல்லுங்க. நாலு முறைக்கு அஞ்சு முறை சொல்லித் தரணும். நீங்க அந்த ரிஸ்க் எடுத்தாத்தான் நான் நடிப்பேன். இல்லேன்னா முடியாது’னு சொல்லிடுவேன். இப்ப எனக்குத் தமிழ், மலையாளம் நல்லாத் தெரியும். தெலுங்கு, கன்னடம் பேசினா புரிஞ்சுக்குவேன்.”
– சென்னாபட்டுரா