அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையைத் தொடங்கியது. கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது.
அதே போல, சந்திரசேகர் இயக்குநராக பங்கு வகித்த கே.சி.பி இன்ஜினீயரிங் நிறுவனத்தில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், சந்திரசேகர் இருவரையும் நீண்டகால நண்பர்கள். இதனால் தொழில் ரீதியாகவும் அவர்கள் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் அதிகப் பணிகள் எடுத்து செய்ததில் கே.சி.பி நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது.
சந்திரசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து அதிகாரபூர்வமாக விலகினாலும், அவர்கள் இருவரும் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வேலுமணி, சந்திரசேகர், சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவுசெய்து ரெய்டு நடத்தியது. முதன்முறை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியபோது சந்திரபிரகாஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று வருமானவரித்துறை ரெய்டின்போதும், சந்திரபிரகாஷ்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, பிறகு அதிகாரிகள் அவரிடம் விசாரணையைத் தொடர்ந்தனர். சந்திரபிரகாஷ், அலுவலகத்தில் ரெய்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது.