ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்: ஜப்பான் பிரதமர் கிஷிடா தகவல்

டோக்கியோ: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவைக் காபாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருவதாக தற்போதைய பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் நோக்கம் என்னவென்று இதுவரை உறுதியாகவில்லை என்று கூறினார்.

பிரச்சாரத்தின் போது பயங்கரம்: முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது. வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். இரண்டு குண்டுகளும் அவருடைய மார்பில் பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது முக்கிய உள் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. இதனால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்: ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் அளித்தப் பேட்டியில், “நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை என் உடல்நிலை எனக்கு அளிக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா” செய்தார். அவரது இந்தப் பேச்சு கவனம் பெற்றது.

ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வருத்தம்: “எனது அருமை நண்பர் ஷின்சோ அபே தாக்கப்பட்டது குறித்து மிகுந்த வேதனையில் உள்ளேன். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவரது குடும்பம் மற்றும் ஜப்பான் மக்களுடன் துணை நிற்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.