ஹமாரா பஜாஜ், தற்போது ஐம்பது வயதில் இருப்பவர்கள் என்னும் வாசகத்தைக் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒரு சமயத்தில், ஸ்கூட்டர் பிரிவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது பஜாஜ் ஆட்டோ. இந்த நிறுவனத்தின் ‘‘செட்டக்’’ (Chetak) ஸ்கூட்டருக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த காலம் இருந்தது.
ஆனால், காலப்போக்கில் சந்தையின் தேவை மாறியதால், ‘செட்டக்’ ஸ்கூட்டருக்கான தேவை குறைந்தது. அதே சமயத்தில் ஹீரோ ஹோண்டா, யமஹா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலவும் மோட்டர் சைக்கிள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.
குழப்பத்தில் இருந்த சமயம்…
1999-ம் ஆண்டு வரை இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைதான் அதிகமாக இருந்தது. 99-ம் ஆண்டு ஸ்கூட்டரை விட மோட்டர் சைக்கிள் அதிகமாக விற்பனையாகத் தொடங்கியது.
ஸ்கூட்டர் பிரிவைத் தவிர, வேறு எந்தப் பிரிவிலும் கவனம் செலுத்தவில்லை. சந்தையைக் கவனிக்க கூட இல்லை. ஸ்கூட்டர் பிரிவில் இருக்கும் நிறுவனம் முதன்முதலில் பெண்களுக்கான வாகனத்தை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், பெண்களுக்கான வாகனமான ஸ்கூட்டியை டி.வி.எஸ் கொண்டு வந்தது. பெண்களுக்கான வாகனத்தை செய்ய மனமில்லை. ஸ்கூட்டருக்குத் தேவையில்லை. ஆண்களுக்கான வாகனத்தில் ஏகப்பட்ட போட்டி என்னும் நிலைமையில் தத்தளித்தது பஜாஜ். போட்டோ காபி என்பது ஜெராக்ஸாக மாறியது. அதுபோல, ஸ்கூட்டர் என்பது ‘செட்டக்’தான் என்று இருந்த நிலைமையில் நிறுவனம் செய்வதறியது தவித்தது. அப்போது வந்தார் நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜின் மகன் ராஜீவ் பஜாஜ்.
வேகமெடுக்க வைத்த பல்சர்…
பஜாஜ் ஸ்கூட்டர் நிறுவனமாகவே அறியப்பட்டது. அதனால் மோட்டார் சைக்கிளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ராஜீவ் முதலில் செய்தது தரத்தில் குறைவாக செயல்பட்ட அவுரங்காபாத் ஆலையை மூடியதுதான்.
அதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் ஒரு ஆலை இருக்க வேண்டும், ஒரு நிறுவனம் வெற்றி அடைய வேண்டும் எனில், தரமான புராடக்ட் இருக்க வேண்டும். அதனால் ஏற்கெனவே இருக்கும் ஆலையில் இதனை செய்வதை விட பூனேவின் சக்கன் என்னும் இடத்தில் புதிய ஆலையை அமைத்தனர். இது பஜாஜ் ஆட்டோவுக்கு மூன்றாவது ஆலை.
வெஸ்பா ஸ்கூட்டர்கள் இருக்கலாம்; கவாஸகி மோட்டர் சைக்கிள் பஜாஜ் வசம் இருக்கலாம். ஆனால், இவை எல்லாம் பஜாஜ் நிறுவனத்தின் சொந்த ஆராய்ச்சியில் தொடங்கப்பட்டவை அல்ல. கேபி 100 என்னும் 2 ஸ்ட்ரோக் வாகனத்தை பஜாஜ் விற்பனை செய்தது. ஆனால், ஒப்பீட்டளவில் விற்பனை மிகவும் குறைவு. அதைவிட பஜாஜ் ஆட்டோ என்பது ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனம் என்னும் மனநிலை மட்டுமே அனைவரிடத்திலும் இருந்தது. அதனால் மோட்டார் சைக்கிளுக்கு போதுமான கவனம் வழங்கப்படவில்லை.
பஜாஜ் சன்னி மற்றும் எம்80 சொந்த புராடக்ட்டுகள்தான். ஆனால், இவை பெரிய வெற்றியை அடையவில்லை. அதனால் புதிதாக ஒரு பிரிவை உருவாக்கி வெற்றி அடைய வேண்டும் என பஜாஜ் திட்டமிட்டது. பெரும்பாலான வாகனங்கள் 100 சிசி வாகனங்களையே தயாரித்து வந்த நிலையில் 150 சிசிக்கு பல்சர் தயாரிக்க முடிவெடுத்தது பஜாஜ்.
ஏற்கெனவே கூட்டாக செயல்பட்டு வந்த கவாஸகி நிறுவனத்துடன் இணைந்து பல்சர் வெளியிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால், கவாஸகி நிறுவனம் மறுத்துவிட்டது. மிகப் பெரிய வாய்ப்பை கவாஸகி இழந்து விட்டது என ராஜீவ் பஜாஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருக்கிறார்.
புதிய புராடக்டுகளை அறிமுகப்படுத்தவில்லை எனில்..
பல்சர் பிராண்டுக்கான ஆராய்ச்சி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பஜாஜ் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம். ஆனால், ஹோண்டா நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் மட்டுமே பல ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால், பஜாஜ்-ல் 50 நபர்கள் மட்டுமே. ‘‘வேறு வழியில்லை. இருக்கும் பணியாளர்களை வைத்துக் கொண்டுதான் போட்டியிட வேண்டும். சரியான புராடக்ட்டுகளை உருவாக்கவில்லை எனில், காணாமல் போன ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பட்டியலில் நாமும் இருப்போம்’’ என ராஜீவ் பஜாஜ் சொல்ல, நிறுவனத்தின் வளர்ச்சியை முடுக்கிவிடும் வேலைகள் நடக்கத் தொடங்கின.
இது தவிர, மார்க்கெட்டிங் குழு வழங்கிய ஆலோசனையை வைத்துக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட மாடல்கள் வடிவமைக்கப்பட்டு, அதில் இருந்து நான்கு மாடல்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக பல்சர் உருவானது. கிட்டத்தட்ட பல்சர் மாடலை உருவாக்குவதற்கு 30 மாதங்களுக்குமேல் ஆனது.
பல்சர் 150 சிசி மற்றும் 180 சிசி வாகனங்கள் வடிவமைக்கப்பட்டது. 25 வயது முதல் 35 வயது நபர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என நிறுவனம் கணித்தது. ஆனால், 35 வயது முதல் 45 வயது பிரிவினரும் அதிகமாக இந்த வாகனத்தை வாங்கினார்கள்.
2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பல்சர் பிராண்ட்டை அறிமுகம் செய்தது. அப்போது முதல் பல வேரியண்டுகளைத் தொடர்ந்து பஜாஜ் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. 2012-ம் ஆண்டு வரை 50 லட்சம் பல்சர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு வரை 1.2 கோடி பல்சர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தவிர, 65-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த பிராண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மூடப்பட்ட ‘செட்டக்’…
பல்சர் விற்பனை வேகமெடுத்த பிறகு ‘செட்டக்’ உற்பத்தி 2006-ம் ஆண்டு டிசம்பருடன் நிறுத்தப்பட்டது. 30 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்ட இந்த பிராண்ட் ஒரு கோடி வாகனங்களுக்குமேல் விற்பனை செய்திருக்கிறது. வட இந்தியத் திருமணங்களில் சீதனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ‘செட்டக்’ உற்பத்தி, 2006-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த பிராண்டை மூடியதில் தலைவர் ராகுல் பஜாஜுக்கு விருப்பம் இல்லை. ஏன் இந்த பிராண்டை மூடவேண்டும் என ராஜீவ் விளக்கினார். ஆனால், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என ராகுல் தெரிவித்திருந்தார். ஆனால், ராஜீவ் பஜாஜ், `செட்டக்’ பிராண்டை மூடியதை அப்பா உணர்வுப்பூர்வமாக அணுகுகிறார். நான் லாஜிக்கலாக சிந்திக்கிறேன்’’ எனப் பொது வெளியிலே பேசி இருக்கிறார்.
2006-ம் ஆண்டு மூடப்பட்ட `செட்டக்’ மீண்டும் 2019-ம் ஆண்டு மறுஅறிமுகம் செய்யப்பட்டது. தற்போது `செட்டக்’ இவியும் (எலெக்ட்ரிக் வாகனம்) சந்தையில் விற்பனையாகி வருகிறது. புதிய ஆலை அமைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பு செயல்படத் தொடங்கியது. ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் வரை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த நொடிக்கு என்ன தேவை…
ராஜீவ் பஜாஜ் கருத்துகள் பிரபலமானவை. பலரும் யுக்தி, இன்னோவேஷன், டிஸ்ட்ரப்ஷன் உள்ளிட்ட பல புதிய வார்த்தைகளை உபயோகித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த நொடிக்கு என்ன தேவையோ, அதை செய்வதுதான் தொழிலுக்கு அடிப்படை என்பார் ராஜீவ் பஜாஜ்.
யோசித்துப் பார்த்தால், ஒரு காலத்தில் `செட்டக்’ தேவையில்லை. தற்போது தேவைப்படுகிறது. அப்போது மூடவும் தயங்கவில்லை, தற்போது மீண்டும் அறிமுகம் செய்யவும் தயங்கவில்லை ராஜீவ் பஜாஜ்.
(திருப்புமுனை தொடரும்)