புதுச்சேரி: “நாடு முழுவதும் 144 தொகுதிகளைத் தேர்வு செய்து வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என புதுச்சேரியில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பணிகளை பாஜக தொடங்கிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
வரும் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணையமைச்சர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்தார். முதல் நாளான வியாழன் அன்று புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், மக்களுடன் உரையாடல் என கூட்டங்களை நடத்தி விட்டு இன்று புதுச்சேரி வந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்பி செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டங்களில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் முருகன், காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் பகுதியில் ஆலய தரிசனம் செய்து விட்டு மீனவ மக்களுடன் உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், “மீனவர்களுக்கு தனியாக அமைச்சகம் அமைத்தது பாரத பிரதமர் மோடிதான். அதற்கு முன்பு வரை மூன்று ஆயிரம் கோடிகள் மட்டும் தான் இந்த துறைக்காக செலவு செய்யப்பட்டது. இப்போது 32 ஆயிரம் கோடி மீனவர் மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல்வளத்தை பாதுகாக்கத்தான் மீன்வள சட்டத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
கடலில் இருந்து 12 கிலோமீட்டர் என்ன நடைமுறை இருக்கிறதோ அதே நடைமுறைதான் உள்ளது. கூடுதலாக ஏதுமில்லை. எல்லாமே 200 மைலுக்கு அப்பால், வெளிநாட்டு கப்பல்களை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த சட்டம் இருக்கும். கிட்டத்தட்ட நூறு கிராமங்கள் இந்தியா முழுவதும் அடையாளம் கண்டுள்ளோம். ஒவ்வொரு கிராமத்திற்குமே அடிப்படை வசதிகளுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
பின்னர் நாடாளுமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள், மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம், புதுவை, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 144 தொகுதிகளை தேர்வு செய்து, அதில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில், புதுவை மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் கர்நாடகாவுக்கு பிறகு புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. தமிழ் மண்ணில் பாஜக ஆட்சி அமைய வேண்டும், நமது ஒரே எண்ணம் புதுவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை நாம் தொடங்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 8 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மூன்று நாட்களில் மொத்தம் 21 கூட்டங்களை முதல்கட்டமாக நடத்த உள்ளதாக கட்சியினர் குறிப்பிட்டனர்.