வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்தஹார்: ஆப்கானிஸ்தானில், தலிபான் நிறுவனரான மறைந்த முல்லா ஒமரின் கார், பூமிக்குள் இருந்து, 20 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டார்.உள்நாட்டு போரில் வென்ற தலிபான்கள், 1996ல் ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் – குவைதா பயங்கரவாதிகள், 2001ல் தகர்த்தனர்.
இதை தொடர்ந்து, ஆப்கன் மீது போர் தொடுத்த அமெரிக்கா, தலிபான் அரசை நீக்கிவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை ஆட்சியில் அமர்த்தியது. இந்நிலையில், 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அமெரிக்க படையினர் ஆப்கனை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, அங்கு மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதற்கிடையே, தலிபான் நிறுவனரான முல்லா ஒமர், கடந்த 2013ல் உயிரிழந்தார். இந்நிலையில், தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்த 2001ம் ஆண்டு, வெள்ளை நிற டொயோட்டா குவாலிஸ் காரில், முல்லா ஒமர் தப்பிக்க முயற்சித்தார். அமெரிக்க படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவரால் காரில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, முல்லா ஒமரின் காரை, தலிபான் படையை சேர்ந்த அப்துல் ஜபார் ஒமாரி என்பவர், ஸாபூல் மாகாணத்தில் உள்ள தன் தோட்டத்தில், பூமிக்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்தார். தற்போது, அந்த காரை அவர் பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் வெளியே எடுத்துள்ளார். அந்த கார், அதிக சேதம் இன்றி அப்படியே இருப்பதாகவும், அதை ஆப்கனின் தேசிய அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகவும் தலிபான்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement