வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுதும் 33 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில், ஒரு ‘சிசிடிவி’ கேமரா வசதி கூட இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், டாடா அறக்கட்டளை இரண்டும் இணைந்து, தேசிய நீதி அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகின்றன. காவல் துறை தொடர்பாக, 2021ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் ‘சிசிடிவி’ கேமரா வசதி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள, 17 ஆயிரத்து, 233 போலீஸ் ஸ்டேஷன்களில், 5,396 ஸ்டேஷன்களில் ஒரு ‘சிசிடிவி’ கேமரா கூட இல்லை. ஒடிசா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் மட்டுமே, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் குறைந்தபட்சம் ஒரு ‘சிசிடிவி’ கேமரா உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள, 894 ஸ்டேஷன்களில் ஒன்றில் மட்டுமே கேமரா உள்ளது. மணிப்பூர், லடாக், லட்சத் தீவுகளில் ஒரு ஸ்டேஷனில் கூட கேமரா கிடையாது.நாடு முழுதும், 2010ல் இருந்து, 2020 காலகட்டத்தில் போலீஸ் படையின் பலம், 32 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், பெண் போலீஸ் எண்ணிக்கை, 10.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
41 சதவீத போலீஸ் ஸ்டேஷன்களில், பெண்களுக்கான உதவி மையங்கள் இல்லை.தேசிய அளவில், போலீஸ் படையில் பெண்களின் எண்ணிக்கையை, 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலத்திலும் இது எட்டப்படவில்லை.
தற்போதுள்ள நிலவரப்படி, தேசிய அளவில், 33 சதவீதத்தை எட்டுவதற்கு, மேலும், 33 ஆண்டு களாகும். மாநில அளவில் பார்க்கையில், ஒடிசாவில் இந்த இலக்கை எட்ட, 428 ஆண்டுகளாகும். அதே நேரத்தில் பீஹாரில், எட்டு ஆண்டுகளில் இலக்கை எட்ட முடியும்.இந்த இலக்கை எட்ட டில்லிக்கு 31 ஆண்டு; குஜராத்துக்கு ஏழு ஆண்டு; மிசோரத்துக்கு 585 ஆண்டுகளாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement