ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 45 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த மே மாதம் பஞ்சாப் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்கலா, சுகாதாரத்துறைக்கான அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீதம் கமிஷன் கேட்டதாக முறையீடு புகார் பெறப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார். முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஜய் சிங்கலா ஜாமீன் கோரி பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது கடந்த 6ம் தேதி விசாரணை நடத்திய பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி லிசா கில் ஜாமீன் தொடர்பாக பதில் அளிக்க மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜாமீன் வழங்கலாம் என மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி ஜாமீன் வழங்கிய உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM